பொங்கலுக்கு வேட்டி 4 முழமா? 8 முழமா? சட்டசபையில் நடந்த சுவாரஸ்ய விவாதம்!
பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் சிறப்பு தொகுப்பில் 8 முழ வேட்டிக்கு பதிலாக 4 முழ வேட்டிகள் வழங்கப்படும் என கைத்தறித் துறை மானிய கோரிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் பேரவையில் இன்று கவனஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார்.
அப்போது, "பொங்கலுக்கு வேட்டி சேலை வழங்கும் திட்டம் தொடர்பாக அமைச்சர் அளித்த தகவல் முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது. இதனால், கைத்தறி நெசவாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும், நெசவாளர்களிடம் கருத்து கேட்டதன் அடிப்படையில் 4 முழம் வேட்டியைத்தான் அவர்கள் பரிந்துரைக்கிறார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். கருத்து கேட்பதெல்லாம் பெயரளவில் நடத்தப்பட்டுள்ளது. உடனடியாக 4 முழ வேட்டி வழங்குவதை ரத்து செய்து 8 முழ வேட்டிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அரி, "ஏற்கனவே அரசு கொள்முதல் ஆணைத் தரும் என்ற நம்பிக்கையில் திருத்தணியில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேலான வேட்டி- சேலைகள் கொள்முதல் செய்யப்படாமல் தேக்கத்தில் உள்ளன. இதேபோல் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள நெய்யப்பட்ட வேட்டி, சேலைகளை கொள்முதல் செய்து, வரும் பொங்கலுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய கைத்தறித் துறை அமைச்சர் விஜய் பாலாஜி, "தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்தவுடன் 12 ஆண்டுகளாக ஒரே ரகத்தில் வேஷ்டி சேலை வழங்கப்பட்டு வருவதாக மக்கள் என்னிடம் கோரிக்கை வைத்தார்கள்.
இந்த ஆண்டு புதிய டிசைனில் வேட்டி, சேலைகள் வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். மக்களுக்கு எது பிடித்துள்ளதோ அதனை தரமானதாக வழங்க வேண்டும் என்பதுதான் முதல்வரின் உத்தரவு. அதன்படி, துறை செயலாளர்கள் மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் மக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு பெரும்பாலான மக்கள் 8 முழ வேட்டி வேண்டாம், 4 முழ வேட்டி தான் வேண்டும் என்று கேட்டார்கள்.
தற்போதைய காலகட்டத்தில் நான்கில் மூன்று பேர் 4 முழ வேட்டிகளை விரும்புவதாக கைத்தறி நிறுவனங்களும் எங்களுக்கு அறிக்கை அளித்தன. இதன் அடிப்படையில் தான் 4 முழ வேட்டிகளையும், ஜரிகை வைத்த சேலைகளையும் மக்களுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
திருவள்ளூர் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட 5,25,000 வேட்டி, சேலைகள் அரசு சார்பில் கொள்முதல் செய்யப்படும். இதேபோன்று தமிழ்நாடு முழுவதும் உற்பத்தி செய்யப்பட்ட வேட்டி, சேலைகளை தமிழ்நாடு அரசு பெற்றுக் கொள்ளும்" என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய திமுக உறுப்பினர் ஆஸ்டின், "4 முழ வேட்டியின் விலை குறைவாகவும், தரமற்றதாகவும் இருப்பதாக நெசவாளர்கள் தெரிவிக்கிறார்கள். தரம் குறைந்த வேட்டிகளை கூலி குறைவாக கொடுத்து வாங்குவதற்கு என்ன காரணம்?" என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்து பேசிய வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன், "கிராமப்புறத்தில் 4 முழ வேட்டிகள் நன்றாக இருக்கின்றன என்பதுதான் கிராம மக்களின் கருத்தாக உள்ளது" என்றார்.
இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் விஜய் பாலாஜி, பொங்கலுக்கு பிறகு அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பொங்கல் பரிசாக வழங்கப்படும் 4 முழ வேட்டிகளை கட்டிக்கொண்டு வருகிறோம். கடந்த காலங்களில் வழங்கப்பட்ட 8 முழ வேட்டிகளை எதிர்க்கட்சியினர் கட்டிக்கொண்டு வரவேண்டும். எது தரமாக உள்ளது என்று மக்கள் பார்த்து புரிந்து கொள்ளட்டும்" என்று தெரிவித்தார்.