×

அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் வெளியே போனது பின்னடைவா?  பொன்.ராதாகிருஷ்ணன் ரியாக்ஷன்..!

 

பாஜக சார்பில் சிறப்பு வாக்காளர் திருத்தம் (SIR) தொடர்பான ஆலோசனை கூட்டம், பெரம்பலூர் பாஜக மாவட்ட தலைவர் முத்தமிழ் செல்வன் தலைமையில் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்.

அதன்பின்னர் செய்தியாளர் சந்தித்தபோது, செங்கோட்டையன் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தது குறித்தும், தவெக தலைவர் விஜயை சந்தித்தது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “செங்கோட்டையனும் விஜயும் என்ன பேசிக்கொண்டார்கள் என்பது அவர்கள் இருவருக்கு மட்டும்தான் தெரியும். ஆனால், செங்கோட்டையனின் செயல்பாடுகள் அவருடைய எதிர்காலத்தை உறுதிபடுத்தக்கூடிய வகையில் அமையுமா? அல்லது புதிய எதிர்காலத்தை உருவாக்கக்கூடிய வகையில் அவர் செயல்படுவாரா? என்பது குறித்து சொல்ல முடியாது. அதற்கு காரணம், திமுக உள்ளிட்ட எந்த தரப்பிலும் இதுவரை கூட்டணிகள் முழுமை பெறவில்லை” என பதில் அளித்தார்.

தொடர்ந்து, அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் வெளியே போனது பின்னடைவா? என்று கேட்டதற்கு, “அதிமுகவில் இருந்து வெளியேறியதற்கு செங்கோட்டையன் தான் கவலைப்பட வேண்டும். அவரிடம் அதிமுக தலைவர்கள் பலர் பேசியுள்ளனர். தமிழ்நாட்டில் திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடு. இந்த ஒற்றை சிந்தனையில் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்கள் அத்தனை பேரும் ஒன்று சேர வேண்டும்” என தெரிவித்தார்.

மேலும், செங்கோட்டையன் - விஜய் சந்திப்பில் பாஜக பின்னணியில் உள்ளது என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, “பாஜகவை பார்த்து தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் பயந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் எதற்கு பயப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து, பயத்தை போக்கிவிட்டால் அவர்களுக்கு நல்லது. இதற்கு பாஜக பொறுப்பு இல்லை” என்றார்.

தவெக தலைவர் விஜய் பாஜகவிடம் கவனமாக இருக்க வேண்டும் என திருமாவளவன் கூறியது குறித்த கேள்விக்கு, “பாஜக குறித்து திருமாவளவனே பாராட்டியுள்ளார். கடுமையான உழைப்பாளிகளைப் பார்த்து திருமாவளவன் பயப்படுகிறார்” என பதில் அளித்தார்.