தவெக-வில் இணைகிறாரா சசிகலா..? ஜெயலலிதா பிறந்த நாளில் முக்கிய அறிவிப்பு வெளியாகிறது..!
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியை துரோகி என விமர்சித்து வந்த அமமுக பொது செயலாளர் டிடிவி.தினகரன், திடீரென அதிமுக- பாஜ கூட்டணியில் சேர்ந்து விட்டார். ஓ.பன்னீர் செல்வமும் அதே கூட்டணியில் சேர முடிவு செய்துள்ளார். ஆனால் சசிகலா எந்த முடிவையும் எடுக்காமல் இருந்து வந்தார்.
அதிமுக தொண்டர்களை பொறுத்தவரை, ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவும், ஒரு முக்கிய தலைவராக பார்க்கப்படுகிறார். சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையான பிறகு, பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று கூறி வந்தார். ஆனால் எடப்பாடியின் விடாப்பிடியான எதிர்ப்பு காரணமாக சசிகலாவின் இந்த எண்ணம் ஈடேறவில்லை.இந்த சூழ்நிலையில் அரசியலில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள சசிகலா விரும்புகிறார். அண்ணா நினைவு நாளில் செய்தியாளர்களை சந்தித்த அவர், வரும் தேர்தலில் தனது ஆதரவாளர்கள் களமிறக்கப்படுவார்கள் என்று கூறினார்.
தனது சகோதரர் திவாகரன் நடத்தி வரும் அரசியல் கட்சியான அண்ணா திராவிடர் கழகத்தை மீண்டும் உயிர்பிக்க சசிகலா முடிவு செய்துள்ளார். ஜெயலலிதாவின் பிறந்த நாளான வரும் 24-ந் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடவும் சசிகலா திட்டமிட்டுள்ளார். அன்றைய தினம் மதுரையில் பிரமாண்ட மாநாட்டினை நடத்தி, தனது அரசியல் பிரவேசத்தை அவர் அறிவிக்க இருப்பதாக கூறப்படுகிறது.மேலும், நடிகர் விஜய்யின் த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து, தென்மாவட்டத்தில் தனக்கு செல்வாக்குள்ள 25 தொகுதிகளில், ஆதரவாளர்களை களம் இறக்க சசிகலா திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. அரசியலில் எப்படி எடப்பாடி பழனிசாமி எதிரியோ, அதேபோல் தனது சகோதரி மகனான டி.டி.வி.தினகரனுடனும் சசிகலா மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். இந்த தேர்தலில், பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க., அ.ம.மு.க. கூட்டணி அமைத்துள்ளதால், டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் சிலர் சசிகலா பக்கம் சென்றுள்ளார்களாம். அவர்களையும் தேர்தல் களத்தில் இறக்கிவிட சசிகலா திட்டமிட்டுள்ளாராம்.
இந்த நிலையில், திவாகரனின் மகனும், அண்ணா திராவிடர் கழகத்தின் இளைஞரணி செயலாளருமான ஜெய் ஆனந்த் நேற்று த.வெ.க. தலைவர் விஜய்யை சந்தித்து, ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது. எனவே, ஜெயலலிதா பிறந்த நாளான இம்மாதம் 24-ந் தேதி சசிகலாவிடம் இருந்து முக்கிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது.