×

ஆஸி துப்பாக்கிச் சூடு நடத்திய சஜித் அக்ரம் ஓர் இந்தியரா..?

 

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள பாண்டி கடற்கரையில் (Bondi Beach) கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 14) யூதர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை நடத்திய இருவரில் ஒருவரான 50 வயதுடைய சஜித் அக்ரம், தெலங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தைச் பூர்வீகமாகக் கொண்ட இந்தியர் என்று இந்திய அதிகாரிகள் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழிடம் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் காவல்துறை நடத்திய பதில் தாக்குதலில் சஜித் அக்ரம் உயிரிழந்தார். அவரது மகன் நவீத் அக்ரம் (24) காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சஜித் அக்ரம் 1998 ஆம் ஆண்டு மாணவர் விசாவில் ஆஸ்திரேலியா சென்று ஓர் ஐரோப்பியப் பெண்ணைத் திருமணம் செய்திருந்தாலும், அவர் தொடர்ந்து இந்தியப் பாஸ்போர்ட்டையே பயன்படுத்தி வந்துள்ளார்.

தாக்குதலில் உயிரிழந்த சஜித் அக்ரமும், அவரது மகன் நவீத் அக்ரமும் கடந்த மாதம் நவம்பர் 1 முதல் 28 வரை ஒரு மாதம் முழுவதும் பிலிப்பைன்ஸில் இருந்துள்ளனர். அங்குள்ள பாஸ்போர்ட் அலுவலகச் செய்தித் தொடர்பாளர் இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். அவர்கள் தங்கள் பயணத்தின் இறுதி இலக்காக பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோ தீவின் டாவோ நகரத்தைக் குறிப்பிட்டுள்ளனர். மின்டானோ தீவின் தெற்குப் பகுதி, பல ஆண்டுகளாக ஐ.எஸ். (ISIS) அமைப்புடன் தொடர்புடைய பிரிவுகள் மற்றும் அபு சயாஃப் போன்ற இஸ்லாமிய தீவிரவாத குழுக்கள் செயல்படும் இடமாகும்.

இந்த பயணத்தின் நோக்கம் குறித்து புலனாய்வாளர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும், பாதுகாப்பு நிபுணர்கள், இந்தச் சந்தேக நபர்கள் இருவரும் மின்டானோ மாகாணத்தில் செயல்படும் சில தீவிரவாத குழுக்களிடம் இருந்து 'இராணுவ பாணி பயிற்சி' பெற முயன்றிருக்கலாம் என்று ஊகிக்கின்றனர். தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் இரண்டு கையால் செய்யப்பட்ட ஐ.எஸ். கொடிகள் மற்றும் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதன் அடிப்படையில், இது ஐ.எஸ். அமைப்பால் தூண்டப்பட்ட தாக்குதல் என்று அதிகாரிகள் முடிவுக்கு வந்துள்ளனர்.

ஆயினும், இந்தத் தாக்குதல் ஐ.எஸ். அமைப்பின் முக்கியத் தலைவர்களின் நேரடிக் கட்டளையால் நடத்தப்பட்டதற்கான ‘கூட்டுச் சதி’க்கான ஆதாரம் எதுவும் தற்போது இல்லை என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி அல்பனீஸ் தெரிவித்துள்ளார். மேலும், சஜித் அக்ரமின் பூர்வீகம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "அந்த விவரங்களுக்குள் நான் செல்ல முடியாது. அவ்வாறு சொல்வது விசாரணையை பலவீனப்படுத்துவதாக அமைந்துவிடும்," என்று கூறி, பிரதமர் அல்பனீஸ் பதிலளிக்க மறுத்துவிட்டார். சஜித் அக்ரம் குறித்த தகவல்களைத் திரட்ட ஆஸ்திரேலிய அதிகாரிகள் இந்திய அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர்.