ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு வைப்பது தான், தி.மு.க., அரசின் மத நல்லிணக்கமா? நயினார் நாகேந்திரன் கேள்வி
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒரு கண்ணில் வெண்ணெய், மறு கண்ணில் சுண்ணாம்பு வைப்பது தான், தி.மு.க., அரசின் மத நல்லிணக்கமா? உயர் நீதிமன்றமே உத்தரவிட்ட பின்னரும், திருப்பரங்குன்றம் தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்றவிடாமல் தடுத்துவிட்டு, அதே மலை மீதுள்ள சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு விழா கொடியேற்றத்திற்கு அனுமதி அளித்துள்ள தி.மு.க., அரசின் ஹிந்து மத வெறுப்பு, கண்டனத்திற்கு உரியது.
ஹிந்துக்களின் நம்பிக்கைகள் என்பதையும் தாண்டி, தமிழர்களின் வழிபாட்டு உரிமைகளை, தி.மு.க., அரசு திட்டமிட்டு பறித்துள்ளதையே இச்சம்பவம் உணர்த்துகிறது. மத்திய பாதுகாப்பு படையினருடன், குறிப்பிட்ட சிலர் மட்டும், மலை மீது சென்று தீபம் ஏற்றினால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை வந்துவிடும் என மிகைப்படுத்தி, நீதிமன்ற உத்தரவையும் மீறி தடை உத்தரவு பிறப்பித்த தி.மு.க.,வின் ஏவல் துறை, நேற்று முன்தினம் இரவோடு இரவாக, திருப்பரங்குன்றம் மலையின் மீதுள்ள கல்லத்தி மரத்தில், சந்தனக்கூடு விழாவிற்கு கொடியேற்ற எப்படி பாதுகாப்பு அளித்தது?
ஓட்டு வங்கிக்காக தி.மு.க., தலைவர்கள் முன்னெடுக்கும் பிளவுவாத அரசியலில், அரசு அதிகாரிகள் பங்குதாரர்களாக மாறிவிட்டனரா? முஸ்லிம் சகோதரர்களின் விழாக்களை கொண்டாடுவதில், ஹிந்துக்களுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை. ஹிந்துக்கள் திருப்பரங்குன்றம் மலை மீது தீபமேற்றுவதில், முஸ்லிம்களுக்கும் எந்த பாதிப்பும் இல்லை.
ஆனால், அமைதியாக நடக்க வேண்டிய அவரவர் மத விழாக்களில், தி.மு.க., எதற்கு உள்ளே புகுந்து குட்டையை குழப்புகிறது. சகோதரத்துவத்துடன் பழகி வரும் இரு சமூகத்தினரிடையே எப்படியாவது மதக் கலவரம் வர வேண்டும். அதை வைத்து, அடுத்த முறை அரியணை ஏற வேண்டும் என்ற தீய எண்ணமே காரணம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.