திமுக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறுகிறதா? நாளை அறிவிக்கிறார் வைகோ
அண்மைக்காலமாகவே மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, திமுக கூட்டணி குறித்து பல்வேறு அதிருப்திகளை வெளிப்படுத்தி வந்தார். தங்களை விட பலம் குறைந்த பிற கூட்டணி கட்சிகளுக்குக் கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட போதும், தன்மானத்தைச் சமரசம் செய்து கொண்டுதான் திமுக கூட்டணியில் தொடர்ந்ததாக அவர் ஆதங்கப்பட்டிருந்தார்.
மதிமுக முதன்மைச் செயலாளரும், எம்.பி-யுமான துரை வைகோ அண்மையில் முதலமைச்சர் விஜய்யை சந்தித்தார். அப்போது தன் தொகுதிக்கு உட்பட்ட சில கோரிக்கைகளையும் முதலமைச்சர் விஜய்யிடம் முன்வைத்தார். இதனைத்தொடர்ந்து தான் வைத்த கோரிக்கைகளை அடுத்த நாளே முதலமைச்சர் விஜய் செயல்படுத்த துவங்கிவிட்டார் என துரை வைகோ கூறியிருந்தார். இந்நிலையில் இன்று நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில், திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும், உடனடியாக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் பெரும்பாலான நிர்வாகிகள் வைகோவிடம் வலியுறுத்தியுள்ளனர். மேலும், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறினால் அடுத்தகட்டமாக விஜய் தலைமையிலான தவெக கூட்டணியில் இணைவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மதிமுக தலைமை, திமுக கூட்டணியை விட்டு வெளியேறி தவெக கூட்டணியில் இணைய திட்டமிட்டு வருவதால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தன் இரு எம்.எல்.ஏ-க்களையும் அவர்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்யும்படி கட்சித் தலைமை அறிவுறுத்தியுள்ளது. ஆனால் கடையநல்லூர் எம்எல்ஏ ராசேந்திரன், சீர்காழி எம்.எல்.ஏ செந்தில் செல்வன் இதனை ஏற்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
இன்று நடைபெற்ற மதிமுக உயர்நிலைக் குழுவில் விவாதிக்கப்பட்ட அம்சங்களின் தொடர்ச்சியாக, சென்னை அண்ணா நகரில் உள்ள தனியார் விடுதியில் நாளை மதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், மதிமுகவின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து இறுதி முடிவெடுக்கப்பட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. அன்று மாலை 3.30 மணியளவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்திக்கிறார். அப்போது திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவது குறித்து உரிய அறிவிப்பை வெளியிடுவார் என்று அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன