×

காதல் திருமணம் செய்தது தவறா?- 4 ஆண்டுகளாக பெண்ணுக்கு கிடைத்த தண்டனை

 

திருவள்ளூர் அருகே மாற்று  சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டதால் நான்கு வருடங்களாக ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக பாதிக்கப்பட்டோர் கைக்குழந்தைகளுடன் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே பெரிய ஓபுளாபுரம் குப்பம்  சேர்ந்தவர் பிரேம் (வ/27) இவர் எம்.பி.சி சமூகத்தை சேர்ந்தவர். இவர் அதே கிராமத்தில் மீனவர் பெண்ணான பானுமதி(வ/23) என்ற பெண்ணை கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துள்ளார். அப்போது மாற்று சமூக பெண்ணை திருமணம் செய்ததாக கூறி அந்த கிராமத்தில் உள்ள பெரியவர்கள் எதிர்ப்புகள் தெரிவித்த பிரேம் குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இதனால் அந்த குடும்பத்தினரை ஊருக்குள் நடக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள கூடாது எனவும் கோவிலுக்கு வரி கட்டக்கூடாது  எனக்கூறி ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும், ஊரில் ஏதேனும் பிரச்சனை நடந்தால் தன்னை காரணம் காட்டுவதாகவும் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தன்னுடைய வீட்டை அடித்து சூறையாடி உள்ளதாகவும், இது சம்பந்தமாக ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் சமாதானம் பேசுவதாகவும், இதனால் தங்கள் உயிருக்கு உடைமைகளுக்கும் பாதுகாப்பு இல்லை எனக் கூறி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர்  விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் தங்களை ஊரில் நடைபெற்ற பொங்கல் விழாக்களிலும் கலந்து கொள்ள விடவில்லை எனவும் கடந்த நான்கு வருடங்களாக இந்த நிலை தொடர்வதால் தங்கள் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டி கண்ணீர் மல்க கைக்குழந்தையுடன் புகார் மனு அளித்துள்ளனர்.