UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் என்பது உண்மையா..? மத்திய அரசு விளக்கம்..!
யுபிஐ போன்ற டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்க வங்கிகள் மற்றும் பிற சேவை நிறுவனங்களுக்கு அனுமதியளிக்க அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், 'கட்டணம் மற்றும் தீர்வு அமைப்புகள் சட்டம், 2007'-ஐத் திருத்துவதற்கான மசோதா நேற்று லோக் சபாவில் நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதா நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில், யுபிஐ பரிவர்த்தனைகளுக்குப் பயனர்கள் எந்தவொரு கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதேவேளையில், எதிர்காலத்தில் குறிப்பிட்ட சில வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டும் மிகக் குறைந்த அளவிலான கட்டணம் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு யுபிஐ பரிவர்த்தனை மேற்கொள்ளும் பட்சத்தில் எந்தவொரு கட்டணமும் வசூலிக்கப்படாது. ஆனால், ஒருவர் ஏதேனும் பொருட்களை வாங்கும் போது, சிறு கட்டணம் வசூலிக்கப்படும். அதுவும், அது குறிப்பிட்ட வரம்புத் தொகைக்கு அதிகமான வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இது பொருந்தும்.
யுபிஐ அமைப்பின் இணையப் பாதுகாப்பு, மோசடித் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான செலவுகளை கருத்தில் கொண்டு, இந்தக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.