வீட்டில் பண கஷ்டமா..? உங்கள் வீட்டுப் பணக்கஷ்டம் தீர எளிய பரிகாரம்!
நம்முடைய கடின உழைப்பிற்கு ஏற்ற பணவரவு உண்டாகவும், தெரிந்தோ தெரியாமலோ பிறரிடம் நாம் கொடுத்த பணத்தை திரும்பப் பெறவும் மகாலட்சுமியின் அருள் என்பது வேண்டும். மகாலட்சுமியின் அருள் மட்டும் பத்தாது. சுக்கிர பகவானின் அருளும் அதேசமயம் குரு பகவானின் அருளும் வேண்டும். இந்த இரண்டு கிரகங்களின் அருள் இருந்தால் பணத்திற்கு பஞ்சமே இல்லை என்று கூட கூறலாம்.
அப்படிப்பட்ட இந்த இரண்டு கிரகங்களின் அருளை பெறுவதற்கு செய்ய வேண்டிய தானத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். பண வரவு அதிகரிக்க தானம் பெருஞ்செல்வத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவர் குருபகவான் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட குரு பகவானின் அருள் இருந்தால்தான் கோடிக்கணக்கில் செல்வத்தை நம்மால் பெற முடியும்.
அதேபோல் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய பணவரவை அருளக்கூடிய கிரகமாக சுக்கிர பகவான் திகழ்கிறார். மேலும் சுக்கிர பகவானின் அருள் இருந்தால்தான் ஆடம்பரமான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும். அதனால் ஒவ்வொருவருக்கும் குரு மற்றும் சுக்கிர அருள் பரிபூரணமாக வேண்டும். அதற்குரிய பரிகாரத்தை இப்பொழுது பார்ப்போம்.
குரு பகவான் என்றாலே அவருக்குரிய கிழமையாக வியாழக்கிழமை திகழ்கிறது. வியாழக்கிழமையில் குருபகவானை வழிபாடு செய்யும்பொழுது குருவின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அதோடு மட்டுமல்லாமல் வியாழக்கிழமை தோறும் மஞ்சள் நிற ஆடை அணிவது, குரு பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரத்தை சாற்றுவது, மஞ்சள் நிற மலர்களை சமர்ப்பிப்பது, கொண்டைக்கடலையின் மேல் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது, கொண்டை கடலையை ஊறவைத்து மாலையாக கோர்த்து குரு பகவானுக்கு சாற்றி வழிபாடு செய்வது போன்றவற்றை செய்வதன் மூலம் குருவின் அருளை பெற முடியும். இதோடு கருப்புக் கொண்டை கடலையை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் காலையில் அதை வேக வைத்து சுண்டலாக தயார் செய்து அருகில் இருக்கக்கூடிய ஆலயத்திற்கு வரும் பக்தர்களுக்கு தானமாக தருவதன் மூலம் குருவின் அருளை பெற முடியும். வியாழக்கிழமை மட்டும் தானம் தருவதோடு மட்டுமல்லாமல் வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர பகவானுக்குரிய வெள்ளை மொச்சை சுண்டலாக தயார் செய்து அதையும் கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்களுக்கு தானமாக தர வேண்டும்.
இப்படி தொடர்ச்சியாக வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் சுண்டலை தானம் செய்வதன் மூலம் குரு மற்றும் சுக்கிர அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். இந்த தானத்தை வாராவாரம் செய்வது சிறப்பு. வாராவாரம் செய்ய இயலாது என்பவர்கள் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ தொடர்ச்சியாக செய்வதன் மூலம் தடைப்பட்டு இருக்கக்கூடிய பணவரவு தாராளமாக நம் கை வந்து சேரும். நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு செல்வ வளம் உயரும்.
குரு மற்றும் சுக்கிர யோகத்தை பரிபூரணமாக பெற்று செல்வ செழிப்புடன் மகிழ்ச்சியான ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வதற்குரிய இந்த தானத்தை முழுமனதோடு செய்வோம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.