×

'கொத்து புரோட்டா' போடுவோம் என பேசுவது நியாயமா? முதலமைச்சர் விஜய்யின் பேச்சை யாரும் ரசிக்கவில்லை – அதிமுக காட்டம்!

 

விருதுநகர் மாவட்டம், சிவகாசி சட்டமன்ற தொகுதி அதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது, "அதிமுகவில் இருந்து வெளியே சென்ற அனைவரும் மண்ணை கவ்வப்போகிறார்கள். அதிமுகவை வைத்து முழுமையாக பொருளாதாரத்தை பெருக்கிக் கொண்டு, எடப்பாடி பழனிச்சாமிக்கு துரோகம் செய்துவிட்டு முன்னாள் அமைச்சர்கள் சிலர் வெளியேறியுள்ளனர். அவர்கள் தாய் கழகத்தில் மீண்டும் இணையும் காலம் விரைவில் வரும். முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ-க்கள் உடன் சேர்ந்து அதிமுகவினர் சிலர் தவெகவில் இணைந்துள்ளதாக கூறுவது ஒரு பொய். அதிமுக உண்மை தொண்டர்கள் ஒரு நாளும் கட்சி மாற மாட்டார்கள்.

தவெகவின் ஆட்டம் முடிவுக்கு வரப் போகிறது. தவெகவின் வெற்றி நிலையான வெற்றி கிடையாது. உள்ளாட்சி தேர்தலில் தவெகவுக்கு மக்கள் சங்கு ஊதுவார்கள். தவெகவுக்கு மக்கள் செல்வாக்கு இருக்கிறது என்றால் 150 இடங்களில் வெற்றி பெற்று இருக்க வேண்டும். ஆனால், 108 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற காட்சிகளை வைத்து ஆட்சி அமைத்துள்ளார்கள்.

மேயராக, துணை முதலமைச்சராக, முதலமைச்சராக இருந்த மு.க. ஸ்டாலினை கொத்து புரோட்டா போடுவோம் என முதலமைச்சர் விஜய் பேசுவது நியாயமா? ஸ்டாலினுக்கு கோபம் வந்தால் தவெக ஆட்சி நிலைக்காது. விரைவில் அவருக்கு கோபம் வரும். முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை நானும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளேன். அரசியல் ரீதியாக மட்டுமே விமர்சனம் செய்துள்ளேன். ஆனால் நான் அவரை அவமானமாக பேசியதில்லை.

மத யானைக்கு நிகரானது திமுக. இதையே அடக்கி ஆண்டவர்கள் நாங்கள். எங்களை பார்த்து தூர்ந்து போன சக்தி என கூறுவதா? தவெக-வுக்கு வாக்களித்த மக்கள் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரே நாடு, ஒரே தேர்தல் அமல்படுத்த வாய்ப்புள்ளதால் தவெக ஆட்சி மூன்றாண்டுகள் மட்டுமே நடைபெறும்.

முதலமைச்சர் பொறுப்பில் உள்ளவர் தார்மீகமாக பேச வேண்டும். இதற்கு முன்னர் எந்த ஒரு முதலமைச்சரும் விஜய் பேசுவதை போல் யாரையும் வசைபாடியதில்லை. தவறு செய்தால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கட்டும். ஒரு முதலமைச்சரே இப்படி பேசுவது பழிவாங்கும் நடவடிக்கை என்பதை காட்டுகிறது. தவெக தலைவர் விஜய்யின் பேச்சை யாரும் ரசிக்கவில்லை" என தெரிவித்தார்.