×

உச்சத்தை எட்டிய பதற்றம்... பாகிஸ்தான் மீது போருக்கு தயாராகும் இந்தியா?

 

பாகிஸ்தானுக்கு எதிரான மத்திய அரசின் அடுத்தடுத்த நகர்வுகள் போருக்கு தயாராகும் சூழலை வெளிப்படுத்துகிறது. 


குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து ஆலோசித்து வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து, காஷ்மீர் தாக்குதல் குறித்தும், இந்தியாவின் சூழல் குறித்தும் விளக்க திட்டமிட்டுள்ளார். பதில் தாக்குதல்கள் நடக்கும் பட்சத்தில், உலக நாடுகளின் ஆதரவை பெற திட்டமிடப்பட்டுவருகிறது. ஏவுகணைகள் முதல் ரஃபேல் போர் விமானங்கள் வரை அனைத்தையும் இந்திய ராணுவம் தயார் நிலையில் வைத்துள்ளது. இந்தியா எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. இந்தியா ராணுவ நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் தடுத்து நிறுத்த ஆயுத்தமாக இருக்க முப்படைகளுக்கும் பாகிஸ்தான் உத்தரவு பிறப்பித்துள்ளது.

 
இந்திய கடற்பரப்பில் போர் கப்பல் மூலம் இந்தியா ஏவுகணை சோதனை நடத்திய நிலையில், பாகிஸ்தானும் இந்தியா - பாகிஸ்தான் இடையே உள்ள போர்நிறுத்த ஒப்பந்தமான, 1972ம் ஆண்டு போடப்பட்ட சிம்லா அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. சிந்துநதி ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக இந்தியா அறிவித்த நிலையில், பதில் நடவடிக்கையாக பாகிஸ்தான் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதேசமயம் எல்லையில் பாகிஸ்தான் படைகளை குவித்துவருகிறது. வான் மற்றும் கடல் எல்லைகளையும் பாதுகாக்க முழு அளவில் எச்சரிக்கையுடன் இருக்க படைகளுக்கு பாகிஸ்தான் உத்தரவு பிறப்பித்துள்ளது.