அப்படிப்பட்டவர் முதலமைச்சரா? தூத்துக்குடியில் ஓபிஎஸ் ஆவேசப் பேச்சு..!
சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுக சார்பில், ‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்’, ‘தமிழ்நாடு தலைகுனியாது’ போன்ற பரப்புரை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக, சமீபத்தில் திமுகவில் இணைந்த ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்தார்.
அவர் பேசியபோது, தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினின் செயல்பாடுகள் தனக்கு திருப்தி அளித்திருப்பதாகத் தெரிவித்தார். அதிமுகவில் இருந்து அண்ணா ஆரம்பித்த திமுகவில் என்னை இணைத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு எந்நாளும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்று பேசிய அவர், ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை ஈபிஎஸ் நிறுத்தியதாகவும், ஸ்டாலின் அந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருவதாகவும் புகழாரம் சூட்டினார்.
மேலும், அதிமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். அதிமுக கட்சியை அழித்த பெருமை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆர்.பி. உதயகுமார் இருவரையே சாரும் என்று நேரடியாக விமர்சித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “அதிமுகவை குழி தோண்டி புதைத்தது எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் அமைச்சர் உதயகுமாகுமாரும் தான். எனக்கு எச்சரிக்கை விடுக்க உதயகுமாருக்கு என்ன தகுதி இருக்கிறது? உதயகுமார் தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கிற எடப்பாடி பழனிசாமி ஊர்ந்து சென்று, சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டு, தற்போது அவரையே இழிவாகப் பேசுகிறார் எடப்பாடியும், உதயகுமாரும் மண்வெட்டியை எடுத்து அதிமுகவை குழி தோண்டி புதைத்து விட்டார்கள். என்னைப் பற்றியோ, நான் கடந்து வந்த அரசியல் பாதையைப் பற்றியோ பேசுவதற்கு அவர்களுக்கு அருகதை இல்லை.
தமிழ்நாட்டு சிறைச்சாலையில் எனக்கு பாதுகாப்பில்லை என்று சின்னம்மா எப்போது சொன்னார்? எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் தானே சொன்னார். அந்த அளவுக்கு கொடிய மனநிலை கொண்ட எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக வரவேண்டும் என்று பாஜக உடனான கூட்டணி கட்சிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்” என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.