சட்டமன்ற விதியே தெரியாமல் ஒரு பொதுச்செயலாளரா? - இபிஎஸ்-ஐ மறைமுகமாக வறுத்தெடுத்த தவெக ஐடி விங்..!
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தவெக மறைமுகமாக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக, தவெக ஐடி விங் எக்ஸ் தள பதிவில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள், தங்களின் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம்தான் கொடுக்க முடியும் என்பதை கூட அறியாதவர், ஒரு கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கிறார் என்பதை எண்ணி மக்கள் எள்ளி நகையாடுவதாக கூறப்பட்டுள்ளது.
தொடர் தோல்விகளால் புலம்ப வேண்டாம் என விமர்சித்துள்ள தவெக ஐடி விங், தங்களின் அரசியல் சாம்ராஜ்யம் சரிவதற்கு தவெக மீது பழிபோட வேண்டாமென கூறியுள்ளது.
ஒரு பலவீனமான தலைமை, தன் தோல்வியை மறைப்பதற்காக அரசு மீதும் நமது கழகத்தின் மீதும் பழி போடுகிறது. உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கே உங்கள் மீது நம்பிக்கை இல்லை. தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்து வரும் ஒரு தலைமையின் கீழ் இருக்க விரும்பாமல், தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் நமது தலைவரின் ஆற்றலை மதித்து, மக்கள் சேவை செய்ய அவர்கள் சுயவிருப்பத்தின் பேரில் வந்து இணைந்துள்ளனர்.
சாதாரணமாக கட்சி மாறுபவர்கள் தங்களின் எம்.எல்.ஏ பதவியைக் காப்பாற்றிக் கொள்ளப் பார்ப்பார்கள். ஆனால், இங்கு அவர்கள் தங்களின் பதவிகளைத் தூக்கியெறிந்துவிட்டு, மக்களின் மறுதேர்தலைச் சந்திக்கத் தயாராக வந்துள்ளனர்.
கூவத்தூரில் என்ன நடந்தது என்பதை இந்த நாடே அறியும்! அன்று சொகுசு விடுதியில் அடைத்து வைத்து, பதவிகளைக் காப்பாற்றிக் கொள்ள நடத்தப்பட்ட நாடகங்களை மக்கள் மறக்கவில்லை. ஆனால் இன்று, தார்மீகப் பொறுப்பேற்று, தங்களின் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்துவிட்டு, மக்கள் மன்றத்தை மீண்டும் சந்திக்கத் துணிவோடு வந்துள்ளார்கள்.
தேர்தலில் மக்கள் உங்களை நிராகரித்துவிட்டார்கள். இப்போது உங்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களே உங்களை நிராகரித்து வருகிறார்கள்.
எங்களின் கவனம் முழுவதும் மக்கள் மேம்பாடு மற்றும் தமிழகத்தின் வளர்ச்சியை நோக்கியே உள்ளது!