×

பருவநிலை மாற்றத்தால் அதிகரிக்கிறதா டெங்கு பாதிப்பு?

 

எல் நினோ தாக்கத்தால் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் டெங்கு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.


மழைக்காலங்களில் தேங்கும் தூய்மையான தண்ணீரில் உருவாகும் 'ஏடிஸ்' வகை கொசுக்கள் மூலம் டெங்கு பரவுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக, பருவமழைக்கு முன்னரே டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மழை இல்லாத காலங்களிலும் வீடுகளில் சேமித்து வைக்கும் தண்ணீரில் ஏடிஸ் கொசுக்கள் முட்டையிடுவதால் டெங்கு பரவலாம். குடங்கள், வாளிகள், தண்ணீர் தொட்டிகள், பிளாஸ்டிக் பாத்திரங்கள் மட்டுமின்றி பூந்தொட்டி அடிப்பகுதி, பழைய டயர்கள், தேங்காய் ஒடுகள் உள்ளிட்டவற்றில் சிறிதளவு தண்ணீர் தேங்கினாலும் கொசுக்கள் பெருகலாம். ஏடிஸ் கொசு முட்டைகள் தண்ணீர் வற்றிய பிறகும் பல மாதங்கள் உயிருடன் இருக்கும்.


இந்நிலையில் சென்னையில் பகலில் கடும் வெப்பமும், மாலையில் திடீர் மழையும் நீடித்து வருகிறது. திடீர் மழையால் மழைநீர் தேங்குவதும், வீடுகளில் தண்ணீர் தேங்குவதும் கொசு உற்பத்தியை அதிகரிக்கிறது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் வெப்பநிலை மாற்றங்கள் காய்ச்சல் போன்ற பாதிப்புகளுக்கு காரணமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கொசு உற்பத்தி அதிகரிப்பதால் டெங்கு பரவும் வாய்ப்பு அதிகரிக்கிறது. வீடு மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் தூய்மையாக வைத்திருப்பது டெங்கு பரவலைத் தடுக்க உதவும். டெங்கு பாதிப்பு குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை, பாதிப்பு கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.