திருச்செங்கோடு தவெக வேட்பாளர் அருண்ராஜ்?
திருச்செங்கோடு தவெக வேட்பாளராக அருண்ராஜ் நிறுத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிட விருப்பமனு கொடுப்பவர்களை தனித் தனியாக நேர்காணல் செய்த பிறகே விஜய் அறிவிப்பார் என கட்சித் தரப்பில் கூறுகின்றனர். அதற்கு முன், தமிழக வெற்றிக் கழகத்திற்கு தொகுதி பொறுப்பாளர்களை நியமிக்க விஜய் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு தொகுதியிலும் ஆலோசனை நடத்தி பொறுப்பாளர்களை தேர்ந்தெடுக்கவும் அறிவுறுத்தியுள்ளார். அதில் முதல் கட்டமாக நேற்று முன்தினம் சோழிங்கநல்லூர் தொகுதிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து இன்று திருச்செங்கோடு தொகுதிக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டம் அனைத்து தொகுதியிலும் கட்சியின் பொதுச் செயலாளர் தலைமையில் நடைபெறும். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதி வாரியாக இருக்கும் கட்சியின் நிர்வாகிகளுக்கு தேர்தல் பணிகள் பிரித்துக் கொடுக்கப்படுகிறது. அந்த வகையில் திருச்செங்கோடு சட்டமன்றத் தொகுதியின் த.வெ.க. வேட்பாளராக அக்கட்சியின் கொள்கை பரப்புப் பொதுச்செயலாளர் அருண்ராஜ் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.