அண்ணாமலை தான் அதிமுகவின் தலைவரா..? செம டென்ஷனான கே.பி. முனுசாமி..!
அதிமுகவில் தலைமைக்கு எதிராக அதிருப்தி நிலவுவதாகவும், இதனால் அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவிக்கு அண்ணாமலையை நியமிக்கலாம் என சில நிர்வாகிகள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியதாகவும் செய்திகள் வெளியாகின. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் கே பி முனுசாமி இது பற்றி விளக்கம் அளித்தார்.
அவர் கூறியதாவது:-
இதையெல்லாம் நீங்களே செட்டப் செய்து, ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி அண்ணாமலைக்கு விளம்பரத்தைத் தேடிக் கொடுக்கிறீர்கள். செய்தியாளர்கள் கேள்வி கேட்கும்போது நியாயமாகக் கேட்க வேண்டும். 54 வருடப் பாரம்பரியமிக்க ஒரு கட்சி, நேற்று வந்த ஒரு நபருக்காக தீர்மானம் போடுகிறது என்று கேள்வி கேட்கிறீர்களே, இது உங்களுக்கே தர்மமாக உள்ளதா?" என்று கோபமாக கேள்வி எழுப்பினார்.
உண்மையான அதிமுக தொண்டன் யார்?
தொடர்ந்து பேசிய அவர், உண்மையான அதிமுக தொண்டனின் விசுவாசம் குறித்து விவரித்தார்: "நான் சொல்வது விஜயபாஸ்கர் போன்ற ஆட்களையோ அல்லது ஓடுகாலி போலக் கட்சியை விட்டுப் போகிறவர்களையோ அல்ல. உண்மையான அதிமுக தொண்டர்கள் தன் தலைவனைப் பார்க்கும் கண்கள், எந்தச் சூழலிலும் இன்னொரு நபரைத் தலைவனாகப் பார்க்காது. அதுதான் உண்மையான அதிமுக" என்றார்.
"எடப்பாடி பழனிசாமிக்கு நிகர் யாரும் இல்லை"
எடப்பாடி பழனிசாமி மீது மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் புகார்களை மறுத்த அவர், அண்ணா தொழிற்சங்கக் கூட்டத்தில் தான் பேசியதை சுட்டிக்காட்டினார். "எடப்பாடி பழனிசாமியின் உழைப்பு, தியாகம் மற்றும் தொண்டர்கள் மீது அவர் கொண்டுள்ள ஈடுபாட்டிற்கு நிகராக வேறு யாராவது இருக்கிறார்களா என்றால், கண்டிப்பாய் யாரும் இல்லை" என்று அவர் உறுதியளித்தார்.
தவெக-வை சாடிய கே.பி.முனுசாமி!
அதிமுகவிலிருந்து விலகி மாற்றுப் பாதையைத் தேடுபவர்கள் குறித்துப் பேசிய முனுசாமி, தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) 'ரசிகர் மன்ற கட்சி' என்று மறைமுகமாகச் சாடினார்.
"கட்சியை விட்டுப் போகிறவர்கள் காழ்ப்புணர்ச்சி காரணமாகப் போகிறார்கள். அவர்களுக்குப் பொதுச்செயலாளர் மீது கோபமில்லை. புதிய ஆட்சி அமைந்துவிட்டதால், திமுகவிற்குப் போனால் வாய்ப்போ அமைச்சர் பதவியோ கிடைக்காது என்பது அவர்களுக்குத் தெரியும்.
ஆனால், இப்போது புதிதாக வந்துள்ள இந்தத் கட்சி (தவெக) தொண்டர்கள் இல்லாத கட்சி, அது ஒரு ரசிகர் மன்ற கட்சி. அங்கே போய் அதை ஆக்கிரமித்துவிடலாம், பதவியைப் பிடித்துவிடலாம் என்ற நப்பாசையில் போகிறார்கள். ஆனால், அப்படி நப்பாசையில் போகிறவர்களுக்கு, அந்தப் புதிய கட்சியின் தலைவர் இன்னும் தன் முகத்தைக் கூடக் காட்டவில்லையே!" என்று கே.பி.முனுசாமி விமர்சித்துள்ளார்.