மதுரை ராஜாஜி மருத்துவமனை புதிய கட்டிடப் பணிகளில் முறைகேடா?
மதுரை ராஜாஜி மருத்துவமனை புதிய கட்டிடப் பணிகளில் முறைகேடு என பரவும் தகவல் தவறானது என தமிழக அரசு உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு உண்மை சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகள் நல மற்றும் ஆராய்ச்சி மையக் கட்டிடம் கட்டுவதற்கு 31.01.2023 அன்று அரசாணை வெளியிடப்பட்டு, ரூ.20 கோடிக்கு நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆரம்பத்தில் தரைத்தளம் மற்றும் ஏழு தளங்கள் (G + 7) கட்டுவதற்கு ஏற்ற வகையில் அடித்தளம் அமைத்து, தரைத்தளம் மற்றும் ஒரு தளம் (G + 1) கட்டுவதற்குத் திட்டமிடப்பட்டது. பின்னர், அடித்தள வடிவமைப்பு G+7-லிருந்து G+5 ஆக மாற்றப்பட்டது. இதனால் ஏற்பட்ட சேமிப்புத் தொகையைக் கொண்டு, G+2 கட்டடப் பணிகளுக்குத் தேவையான கூடுதல் பணியளவுகள் சரிசெய்யப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டன.
மேற்கண்ட பணிகள் அனைத்தும் முந்தைய ஆட்சிக் காலத்திலேயே முடிக்கப்பட்டு, அதற்கான ஒப்புதல் தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளி வழங்கும் குழுவிடம் (Tamil Nadu Tender Award Committee) பெறப்பட்டு, அரசாணை வெளியிடுவதற்காக அரசுக்கு அனுப்பப்பட்டது. தேர்தல் காலத்தை முன்னிட்டு அரசாணை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டு, தற்போது அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட முன்மொழிவின் அடிப்படையில், ஏற்கனவே வழங்கப்பட்ட ரூ.20 கோடி நிர்வாக ஒப்புதல் தொகைக்குள், கூடுதல் நிதி ஒதுக்கீடு இன்றி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
29.07.2026 அன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், திட்டப் பணிகளின் மொத்த மதிப்பான ரூ.18.79 கோடி என்பதற்குப் பதிலாக தவறுதலாக ரூ.18.70 கோடி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. எழுத்துப் பிழையைத் திருத்தும் பொருட்டு, உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, 27.08.2026 அன்று திருத்திய அரசாணை வெளியிடப்பட்டது. இக்கட்டடப் பணிகள் மொத்தம் ரூ.40 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக, ரூ.20 கோடி செலவில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்கள் (G + 2) கட்டப்பட்டுள்ளன. பின்னர் கூடுதலாக ரூ.20 கோடி மதிப்பீட்டில் 3, 4 மற்றும் 5ஆம் தளங்களுக்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கூடுதல் தளங்கள் கட்டுவதற்கான அரசாணை பெறுவதில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக, தேர்தலுக்கு முன்பாக கட்டடப் பணிகளை முழுமையாக முடிக்க இயலவில்லை. இப்பணிகளில் எவ்வித முறைகேடும் நடைபெறவில்லை" என விளக்கம் அளித்துள்ளார்.