ரூ.42 கோடி நீர்வளத்துறை டெண்டரில் முறைகேடு
அமைச்சர் புஸ்ஸி ஆனந்தின் நீர் வளத்துறையில் ரூ.42 கோடியில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கான டெண்டர் அனைத்து ஒப்பந்ததாரர்களும் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக அறப்போர் இயக்கத்தின் ராதாகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக தவெக அரசின் நீர்வளத்துறை ஒதுக்கியுள்ள ரூ.42 கோடி மதிப்பிலான 202 டெண்டர்களில், மெகா முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.10 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு வெறும் 2 நாட்களும், 50-க்கும் மேற்பட்ட பணிகளுக்கு வெறும் 7 நாட்களும் மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பது, முறைகேடு குறித்த சந்தேகத்தை மேலும் வலுவாக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். ஆன்லைன் டெண்டர் முறை அமலில் இருந்தும், குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் "சிறப்பு நிபந்தனைகள்" விதிக்கப்பட்டது ஏன்? என கேள்வியும் எழுப்புகின்றன. ஓபன் டெண்டர் என கூறிவிட்டு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும் யாருக்கு டெண்டர் என முடிவு செய்துவிட்டு டெண்டர் விடப்படுகிறதா? என்றும் அறப்போர் இயக்கத்தின் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.