×

வனத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு படி நிதியில் முறைகேடு

 

அம்பை வனக்கோட்டத்தில் வனத்துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் உணவு படி நிதியில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் கீழ் பல்வேறு வனக்கோட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக அம்பாசமுத்திரம் மற்றும் களக்காடு வனக்கோட்டங்கள், கடினமான மலை மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளாக உள்ளன. இப்பகுதிகளில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 0 அடி முதல் 6,000 அடி உயரம் வரை மாறுபடும் நிலப்பரப்புகளில் களப்பணியாளர்கள் தினசரி நடைபயணம் மேற்கொண்டு வனப்பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வேட்டைத் தடுப்பு, வனக்கண்காணிப்பு, வனவிலங்கு கணக்கெடுப்பு, பல்லுயிர் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மிகவும் கடினமான சூழ்நிலைகளில் மேற்கொண்டு வருவதை கருத்தில் கொண்டு, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர ரூ.840/- உணவுப்படி, கடந்த நவம்பர் 2025 வரை வழங்கப்பட்டதாகவும், டிசம்பர் 2025 முதல் இதுவரை வழங்கப்படவில்லை.


இது தொடர்பாக சம்பந்தப்பட்ட வனச்சரகர், துணை இயக்குநர் மற்றும் கள இயக்குநர் ஆகியோரிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை நிலுவையில் உள்ள உணவுப்படி கிடைக்கவில்லை. சமீப காலங்களில் இந்த உணவுப்படி தொடர்பான நிதி தொகைகள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அல்லது ஒப்பந்ததாரர்களின் வங்கிக் கணக்குகளுக்கு சென்றதாக கூறப்படுகிறது.தற்போதுள்ள வனத்துறை அதிகாரிகள் போலியான பில் தயார் செய்து  ரேஷன் படி பணத்தை மோசடி செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோன்று வேட்டைத் தடுப்பு முகாம்கள் மற்றும் கணக்கெடுப்பு பணிகள் மேலும், வேட்டைத் தடுப்பு முகாம்களுக்கான உணவு மற்றும் உணவுப்படி, சிங்கவால் குரங்கு கணக்கெடுப்பு, புலிகள் கணக்கெடுப்பு, மலை மொங்கான் பறவை கணக்கெடுப்பு, வரையாடு கணக்கெடுப்பு, தவளை ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு வனவிலங்கு மற்றும் பல்லுயிர் சார்ந்த களப்பணிகளுக்காக ஒதுக்கப்படும் உணவு மற்றும் நிதி பயன்பாடு குறித்தும் பணியாளர்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனவே, அனைத்து பணிகளுக்கும் கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்ட மற்றும் செலவிடப்பட்ட உணவு, உணவுப்படி, பயணச் செலவு மற்றும் தொடர்புடைய நிதி ஒதுக்கீடுகள் குறித்து முழுமையான கணக்குத் தணிக்கைமேற்கொண்டு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று களக்காடு – முண்டந்துறை புலிகள் காப்பகம் களப்பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.