×

திண்டுக்கல்லில் 4 ரேஷன் கடைகளில் முறைகேடு - 4 விற்பனையாளர்கள் சஸ்பெண்ட்

 

திண்டுக்கல்லில் 4 நியாய விலை கடைகளில் முறைகேடு நடைபெற்று இருப்பது அம்பலமான நிலையில் 4 விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் நகர் பகுதியில் கூட்டுறவு பண்டக சாலைகளுக்கு கட்டுப்பட்டில் இயங்கும் 15 ரேஷன் கடைகளில் 15 கூட்டுறவு சார்பதிவாளர்கள் அடங்கிய பறக்கும் படை குழுவினர் ஒரே நேரத்தில் ஆய்வு செய்த போது கோவிந்தராஜ் நகர் ரேஷன் கடையில் விற்பனையாளர் பாய்ன்ட் ஆப் சேல் மெஷினில் உள்ள கையிருப்பு விபரங்களை விட கடையில் பொருட்கள் குறைவாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நடத்தப்பட்ட விசாரணை்ில் விற்பனையாளர் கிருஷ்ணமூர்த்தி (59), ரேஷன் பொருட்களை விற்று முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது

அதேபோல் பாலகிருஷ்ணாபுரம் ரேஷன் கடை விற்பனையாளர் சரண்யா(37), நாயக்கர்புதுத்தெரு ரேஷன் கடை விற்பனையாளர் டிவைன் ஆரோமெர்சிலின் (43), கருணாநிதி நகர் ரேஷன் கடை விற்பனையாளர் மெகராஜ்(50), ஆகியோரும் பொருட்களை விற்று முறைகேட்டில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. 4 ரேஷன் கடைகளிலும் ரூ.36 ஆயிரத்து 400 கையிருப்பு குறைந்ததால் 4 பேருக்கும் ரூ.49,575 அபராதம் விதிக்கப்பட்டு 4 பேரையும் 'சஸ்பெண்ட்' செய்து மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் உத்தரவிட்டார்.