ஐஆர்சிடிசி அப்கிரேடு... ஆனால் டிக்கெட் புக்கிங்கில் பல்வேறு சிரமங்கள்
ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது, குறிப்பாக ஐஆர்சிடிசி செயலியைப் பயன்படுத்தும் பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாகக் கருத்துகள் தெரிவிக்கின்றனர்.
ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதைவிட, நேரடியாகச் சென்று டிக்கெட் முன்பதிவு செய்வதே சிறந்தது என சிலர் கருதுகின்றனர். குறிப்பாக தட்கல் டிக்கெட் முன்பதிவின்போது ஏஜெண்டுகள் தொடர்பான நடைமுறைகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ஐஆர்சிடிசி செயலியில் பயண டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பல்வேறு கேள்விகள் மற்றும் இணையக் குறைபாடுகள் காரணமாக ஆன்லைனில் டிக்கெட் பெறுவது அரிதாக இருப்பதாகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், தட்கல் முன்பதிவு நேரத்தில் தற்போதைய ஐஆர்சிடிசி செயலியைப் பயன்படுத்துவது மிகவும் சிரமமாக இருப்பதாகவும், முன்பு இருந்த IRCTC Connect செயலி User Friendly-ஆக இருந்ததாகவும் சிலர் கூறுகின்றனர்.
புதிய செயலி அல்லது தொழில்நுட்ப மாற்றங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, அதை பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் பயணிகளிடம் கருத்துகளைப் பெற்று அதற்கேற்ப மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதனுடன், ரயில்வே துறையின் செயல்பாடுகள் மற்றும் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் குறித்தும் சிலர் கேள்விகளை எழுப்பியுள்ளனர். குறிப்பாக, மூத்த குடிமக்களுக்கான பயணச்சலுகை நீக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, ரயில்வே துறையின் தற்போதைய அணுகுமுறை குறித்து கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், இந்தப் பிரச்சினைகள் குறித்து ரயில்வே அமைச்சகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதேபோன்ற சிரமத்தை தாங்களும் எதிர்கொள்வதாகவும் சில பயணிகள் குறிப்பிட்டுள்ளனர்.