ஈரான் போர்- நாமக்கல்லில் 20 கோடி முட்டைகள் தேக்கம்
ஈரான் போர் பதட்டம் காரணமாக இந்தியாவில் இருந்து முட்டை ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தம் எதிரொலியாக நாமக்கல் பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் சுமார் 20 கோடிக்கு அதிகமான முட்டைகள் தேக்கமடைந்துள்ளது.
நாமக்கல் மண்டலத்ததில், சுமார் 1,100 க்கு மேற்பட்ட முட்டைக் கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் சுமார் 10 கோடி கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 7 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. நாள்தோறும் சுமார் 70 லட்சம் முட்டைகள் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் நாமக்கல் பகுதியில் இருந்து மட்டுமே முட்டை அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஓமன், பஹ்ரைன், மஸ்கட் போன்ற ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் ஒரு சில ஆப்ரிக்க நாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. ஈரான் போர் காரணமாக இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி தற்போது முற்றிலும் தடைப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாமக்கல்லைச் சேர்ந்த முட்டை ஏற்றுமதியாளர் கூறுகையில், நாமக்கல் லில் இருந்து வளைகுடா நாடுகளான ஈரான் ஈராக் துபாய் கத்தார் ஓமன் பஹ்ரைன் சார்ஜா ஆகிய நாடுகளுக்கு முட்டைகள் ஏற்றுமதி ஆகி வந்தது. ரம்ஜான் நோன்பு காரணமாக இந்த நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி வெகுவாக குறைந்தது. இந்த நிலையில் தற்போது ஈரான் போர் பதட்டம் காரணமாக இந்தியாவில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி முற்றிலும் தடைப்பட்டுள்ளது. எந்த கப்பலும் செல்லவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் நாமக்கல் லில் இருந்து 77 கண்டெய்னர் ல் கப்பலில் அனுப்பப்பட்ட 3.50 கோடி முட்டைகள் நடு கடலில் தத்தளித்து வருகிறது. வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ள தால் நாமக்கல் பகுதியில் உள்ள கோழிப் பண்ணைகளில் தற்போது சுமார் 20 கோடி முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.