☰
×

"கடன் பிரச்சனையால் தனிஷ்க் கடையில் கொள்ளை அடித்ததாக நிஷாந்த் வாக்குமூலம்"

 

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளையில் கைது செய்யப்பட்ட இன்ஸ்டாகிராம் பிரபலம் மீனாட்சியின் சமூகவலைதளங்களை தேவைப்பட்டால் முடக்குவோம் என மதுரை காவல் ஆணையர் ராஜேந்திரன் கூறியுள்ளார். 

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய மதுரை காவல் ஆணையர் ராஜேந்திரன், "தனிஷ்க் நகைக்கடைக் கொள்ளை குறித்து இன்ஸ்டா பிரபலம் மீனாட்சிக்குத் தெரியும். நிஷாந்த் கொள்ளையடிக்க போவதும் மீனாட்சிக்கு முன்பே தெரியும். நிஷாந்த் உடனான தொலைபேசி உரையாடலை வைத்த மீனாட்சியை கைது செய்தோம். கொள்ளைக்கு 2 நாட்கள் முன்னதாகவே கடையை நோட்டம் பார்த்திருக்கிறார்கள். கொள்ளை போன 11.384 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளன. இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரித்து வருகிறோம்.  தனது கடன் பிரச்சனை காரணமாகத்தான் இந்தக் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றினேன் என நிஷாந்த் வாக்குமூலம் கொடுத்துள்ளார். தொடக்க விசாரணையின் மூலம் இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மீனாட்சிக்குத் தெரியும் எனத் தெரியவந்துள்ளது. ஆனாலும் அவர் தகவல் அளிக்காமல் இருந்துள்ளார். கொள்ளையடிக்கப்பட்ட பாதி நகைகள் எங்கு இருந்தன என்று மீனாட்சிக்குத் தெரிந்துள்ளது. மதுரை தனிஷ்க் நகைக் கடை கொள்ளையில் கைதான நிஷாந்த் மீது, கடந்த 2023ம் ஆண்டு பைக் விபத்தில் மரணத்தை ஏற்படுத்தியதாக 304A பிரிவின் கீழ் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அந்த விபரங்களையும் எடுத்து விசாரிக்க உள்ளோம். 

கொள்ளைக்கு மீனாட்சி தனது ஸ்கூட்டரைக் கொடுத்து உதவியதோடு, நிஷாந்தின் தந்தை சுரேஷ் நகைப் பையை வீட்டில் பதுக்கியுள்ளார்.  நிஷாந்தின் கைகளில் இருந்த டாட்டூக்களே அவரை எளிதில் அடையாளம் காண உதவின. கொள்ளை போனது தெரிந்தும் நகைகள் குறித்து கணக்கெடுப்பதில் காலதாமதம் இருந்ததால் தோராயமாக 15 முதல் 18 கிலோ இருக்கும் என புகாரில் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு சரியான அளவீடு செய்து 11.38 கிலோ என்பது தெரியவந்தது. அந்த நகை முழுவதும் மீட்கப்பட்டுள்ளது" என்றார்.