ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை..!
கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட பிறகு ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வை கட்டாயமாக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் 5 ஆண்டுகளில் ஓய்வுபெறவுள்ள ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலக்கெடுவை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து கடந்த மே மாதம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர் மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை 55 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாகவும், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்களை 45 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாககவும், குறைத்து கடந்த ஜனவரி மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதேபோல, பொதுப் பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணை 60 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக குறைக்கக் கோரி 2010-ம் ஆண்டு நியமிக்கப்பட்ட பொதுப் பிரிவை சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மூன்று ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
அந்த மனுவில், 'பீகார் மாநிலத்தில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு பொதுப் பிரிவு ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை 50 சதவீதமாக நிர்ணயித்து அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. பீகாரை போல தமிழ்நாட்டிலும் பொது பிரிவு ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்ணை 50 சதவீதமாக நிர்ணியிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தோம்.
ஆனால் இதுதொடர்பாக அளித்த விண்ணப்பத்தை பரிசீலிக்கவில்லை. குறைந்தபட்ச மதிப்பெண்களை 50 சதவீதமாக குறைப்பது தொடர்பாக பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்" என குறிப்பிட்டிருந்தனர்.
இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆஷா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,"பொதுப் பிரிவினருக்கான தகுதி மதிப்பெண்களை குறைப்பது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்கப்பட உள்ளது" என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த கொள்கை முடிவை நீதிமன்றத்தில் தெரிவிக்க ஏதுவாக வழக்கு விசாரணையை ஜூலை 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அதுவரை ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது என உத்தரவிட்டுள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்வின் முதல் தாளை 59,535 ஆசிரியர்களும், இரண்டாம் தாளை1,60,929 ஆசிரியர்களும் எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.