×

அதிமுகவினருக்கு புதிய ஐடி கார்டுகளை வழங்கும் பணி தீவிரம்! பொதுக்குழுவுக்கு ஆயத்தமா?

 

கிருஷ்ணகிரியில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் இன்று கட்சி உறுப்பினர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுக துணை பொதுச்செயலாளர் கே.பி முனுசாமி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, “தமிழகம் முழுவதும் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களுக்கு இன்று எடப்பாடி பழனிச்சாமி கையொப்பமிட்ட உறுப்பினர் அட்டை வழங்கப்படுகிறது என தெரிவித்தார். தமிழகத்தில் தற்பொழுது ஆவின் நிர்வாகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஆவின் நிர்வாக பாதிப்பால் சுமார் 30 லட்சம் நுகர்வோர்களும் பாதிப்பை சந்தித்துள்ளனர். திமுக அரசு உரிய முறையில் செயல்படாத காரணத்தினாலும், நல்ல திறமையான அதிக அதிகாரிகளை பணியமர்த்தாத காரணத்தினாலும், தனக்கு வேண்டியவர்களை பணி அமர்த்திய காரணத்தினாலும் ஒவ்வொரு துறையும் செயலிழந்து உள்ளது. 

மாவட்ட நிர்வாகத்தை பொறுத்தவரையில் எந்த துறையும் முறையாக செயல்படவில்லை. உள்ளாட்சி, நகராட்சி, பொதுப்பணித்துறை, பள்ளிக் கல்வித்துறை என அனைத்து துறைகளும் முறையாக செயல்படுவதில்லை. தேசிய கட்சியின் தலைவர் நட்டா வடமாநிலத்தில் இருந்து இங்கு வந்து கருத்துக்களை சொல்லிவிட்டு சென்றுள்ளார். அவர் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்பது அவருடைய இயற்கையான ஆசை. தமிழகம் வளர்ச்சி அடையவில்லை என அவர் கூறிய கருத்துக்கு 30 ஆண்டு காலம் ஆட்சி செய்த அதிமுக பதிலளிக்க வேண்டியது எங்களது கடமை என நாங்கள் கருதுகிறோம். அகில இந்திய அளவில் கல்வியின் விழுக்காட்டில் கடைசி ஐந்து இடத்தில் பீகார், ராஜஸ்தான் உள்ளது. அங்கு யாருடைய ஆட்சி உள்ளது? ஆனால் தமிழகம் 12 வது இடத்தில் உள்ளது. 

வயது முதிர்ந்தவர்கள், வயதானவர்கள் என ஒட்டுமொத்த கல்வி கற்றல் விழுக்காட்டில் கேரள முதலிடத்திலும் தமிழகம் 12-வது இடத்திலும் உள்ளது. நாங்கள் ஆட்சி செய்த பொழுது இன்று மத்தியில் உள்ள பாஜக அரசு தமிழகம் சிறந்த மாநிலம் என வேளாண்மை துறை, கல்வி, சுகாதாரத் துறை, நீர் மேலாண்மை, உள்ளாட்சித் துறை என 42 விருதுகளை சிறந்த மாநிலம் என வழங்கி உள்ளது. பாஜக எங்களது கூட்டணியில் தான் இருக்கிறார்கள், இருந்தாலும் நாங்கள் செய்த சிறந்த பணிகளை விளக்க வேண்டியது எங்களது கடமை” என்றார்.