×

ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கை -  மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்!!

 

ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். 

தென்னாப்பிரிக்காவில் முதன் முதலாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று  தற்போது பல்வேறு நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது.  குறிப்பாக இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா ,டெல்லி ,சண்டிகர் ,பஞ்சாப் ,ஆந்திரா ,கேரளா என பல மாநிலங்களிலும் ஒமிக்ரான் தொற்று வேகம் எடுக்க ஆரம்பித்துள்ளது.  

இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒமிக்ரான்  தொற்றை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,  விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளை பரிசோதனை செய்யும் முயற்சியில் தீவிரமாக சுகாதாரத்துறை இறங்கியுள்ளது.

அத்துடன் விமான நிலையத்தில் பரிசோதனையில் கொரோனா  இருப்பது உறுதி செய்யப்படும் பட்சத்தில் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர்களின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அவற்றை ஆய்வுக்கு அனுப்பி ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனரா? என்பதை கண்காணிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் ஒமிக்ரான் பரவாமல் தடுக்க ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.  தடுப்பூசி போடாதவர்களுக்கு முதல் டோஸ் போட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் மருத்துவ செயலாளர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஒமிக்ரான் வேகமாக பரவும் தன்மை உடையது என விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள் ,  பொது இடங்களில் மக்கள் முக கவசம் அணிவது தீவிரமாக கண்காணியுங்கள் என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.