×

நகைக்கடன் ஆய்வு பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்

 

கூட்டுறவு நிறுவனங்களில் 100% பொது நகைக்கடன் ஆய்வு பணிகளை  விரைந்து முடிக்க அனைத்து மண்டல இணைப்பதிவாளருக்கு, கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

கூட்டுறவு நிறுவனங்களில் கடந்த மார்ச் மாதம் முப்பத்தி ஒன்றாம் தேதி முதல் நிலுவையிலுள்ள பொது நகை கடன்கள் மற்றும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் ஆய்வு நாளில் உள்ள பொது நகை கடன்களை தள்ளுபடி செய்ய, அயல் மண்டலத்தில் பணிபுரியும் கூட்டுறவு சார்பதிவாளர், மத்திய கூட்டுறவு வங்கியின் சரக மேற்பார்வையாளர், கள மேலாளர் மற்றும் நகை மதிப்பீட்டாளர் ஆகியோர் கொண்ட குழு அமைத்து 100% ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

இந்த ஆய்வுக் குழுக்கள் தங்களது பணியை நவம்பர் 15ம் தேதிக்குள் முடித்து, ஆய்வு மேற்கொள்ளப்படும் கழகத்தின் துணைப் பதிவாளரிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், சரக துணைப்பதிவாளர் சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் அல்லது மண்டல இணைப்பதிவாளர் அளிக்க வேண்டும் எனவும், அவர்கள் நவம்பர் 20ம் தேதிக்குள் ஆய்வறிக்கையை பதிவாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இப்போது நகை கடன் தள்ளுபடி தொடர்பான பட்டியலில் கண்டுள்ள நகை கடன்களை அயல் மாவட்ட கூட்டுறவு தணிக்கை அலுவலர்கள் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதால், இப்பணிகளை முடிக்க ஏதுவாக ஆய்வுக் குழுக்கள் தங்களது பணியை நவம்பர் 25ம் தேதிக்குள் முடித்து துணை பதிவாளருக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், சரக துணைப்பதிவாளர் சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் அல்லது மண்டல இணைப்பதிவாளர் அளிக்க வேண்டும் எனவும், அவர்கள் நவம்பர் 30ம் தேதிக்குள் ஆய்வறிக்கையை பதிவாளருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஆய்வுக் குழுக்கள் ஆய்வு பணியை முடித்த உடன் தகவல் பதிவு பணியையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் அனைத்து மண்டல இணைப்பதிவாளர் கூட்டுறவு சங்க பதிவாளர் சுற்றறிக்கை மூலம் உத்தரவிட்டுள்ளார்.