☰
×

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம் கொலை..! – மனைவியை கழுத்தை நெரித்து கொன்ற அதிர்ச்சி சம்பவம்!

 

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பகுதியைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 42). இவர் சில மாதங்களுக்கு முன்பு வரை நெல்லையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த நிலையில், தற்போது தனது சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி வனோபி (வயது 34). இந்த தம்பதிக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

வனோபி இன்ஸ்டாகிராம் தளத்தில் வீடியோக்கள் பதிவிடும் பழக்கம் கொண்டவர். இந்நிலையில், நேற்று (நவம்பர் 7) வனோபி தனது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பதாக, அவரது கணவர் அருணாச்சலம், பாப்பாக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த பாப்பாக்குடி காவல்துறையினர், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணையை மேற்கொண்டனர். பின்னர் இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், வனோபி கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

எனவே வனோபியை கொலை செய்தது யார் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதனிடையே, வனோபியின் கணவர் அருணாச்சலம், மனைவி இறந்தது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, தனது நான்கு வயது குழந்தையுடன் வீட்டிலிருந்து தப்பி சென்றது தெரியவந்தது.

இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர், அருணாச்சலத்தை தேடும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, நேற்று இரவு அருணாசலத்தை காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல் வெளியானது. அதாவது, வனோபி இன்ஸ்டாகிராம் மூலம் பல ஆண் நண்பர்களுடன் பழகி வந்ததாக தெரிகிறது.

சில நேரங்களில் அவர்களது வீட்டில் வைத்து, வனோபி அவரது ஆண் நண்பர்களுடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதை பலமுறை நேரில் கண்ட கணவர் அருணாச்சலம், பிற ஆண்களுடன் தகாத உறவில் இருப்பதை நிறுத்திக்கொள்ளுமாறு கண்டித்துள்ளார். ஆனாலும், வனோபி தொடர்ந்து பிற ஆண்களுடன் தகாத உறவை கடைபிடித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வனோபிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் சென்னையைச் சேர்ந்த ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. அந்த நபர் சென்னையில் இருந்து வனோபியை சந்திக்க அடிக்கடி அவர்களது வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இதனால், வனோபிக்கும், அருணாச்சலத்திற்கும் இடையே பலமுறை தகராறு ஏற்பட்டுள்ளது.

அதேபோல், நேற்றும் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், அருணாச்சலம் ஆத்திரத்தில், தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அருணாச்சலத்தை காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். தகாத உறவால் மனைவியை, கணவரே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.