×

"இன்ஸ்டாகிராம் மட்டும் அரசியல் அல்ல" - இளைஞர்களுக்கு அறிவுரை கூறி வாக்களித்த வானதி சீனிவாசன்..!

 

கோவை வடக்குத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் வானதி சீனிவாசன், கோவையில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில்;, “2026 சட்டமன்றத் தேர்தல் வாக்கு பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. பெண்களும், இளைஞர்களும் அதிகளவு வாக்களித்து வருகின்றனர்.தேர்தல் பரபரப்பிற்கு மத்தியிலும், தி.மு.க இன்று காலை வரை கோல்ட் காயின், சில்வர் காயின் என டிராமா பண்ணுகிறது. ஆட்சி மாற்றம் தேவை என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர். 

ஏற்கனவே கோவை மாநகராட்சியில் இதே போன்ற நாடகங்களைச் செய்தார்கள். அதன் விளைவு என்ன? இன்று குப்பைகளைக் கூட எடுக்க ஆளில்லை. மக்கள் இந்த ஏமாற்று வேலைகளைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் தேவை என்பதில் மக்கள் மிக உறுதியாக இருக்கின்றனர். கடந்த 6 மாத காலமாகத் தங்களின் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரிப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு, இந்த ஆட்சி மாற்றத்தின் மூலம் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும்" என நம்பிக்கை தெரிவித்தார்.

இளைஞர் சக்தியால் எதையும் சாதிக்க முடியும். ஆனால், இன்ஸ்டாகிராம் மற்றும் சமூக ஊடகங்களில் இருப்பது மட்டும் அரசியல் அல்ல. இரண்டு மணி நேரச் சினிமா என்பது வேறு, நிஜ வாழ்க்கை அரசியல் என்பது வேறு. இன்ஸ்டா என்பது ஒரு கருவி மட்டுமே; முடிவெடுப்பதில் புத்திசாலித்தனம் வேண்டும். 

கோவை மற்றும் தமிழகத்தின் பல இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்துள்ளதால் வாக்குப்பதிவு தாமதமாகிறது. தேர்தல் ஆணையம் இதில் இன்னும் துரிதமாகச் செயல்பட்டிருக்க வேண்டும்" என்றும் தனது அதிருப்தியைத் தெரிவித்தார்.