×

காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியால் காப்பாற்றப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!

 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மற்றும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால் வீடுகளில் வெள்ளநீர் புகுந்ததுடன், ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. 

இந்த சூழலில் சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறையில் பெரு மழையில் சிக்கி தவித்து முறிந்து விழுந்த மரத்தின் கீழே சுயநினைவில்லாமல் உதயா என்பவர் கிடந்துள்ளார். அவர் இறந்து விட்டதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.  இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சென்னை டிபி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி இளைஞர் உதயா உயிருடன் இருப்பதை அறிந்து கொண்டார் . 

இதையடுத்து பாதிக்கப்பட்டிருந்த இளைஞரை தனது தோளில் தூக்கி சென்று ஆட்டோவில் ஏற்றி சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.  இந்த வீடியோ இணையதளத்தில் வைரலானது. பொன்னான நேரத்தை பயன்படுத்தி இளைஞரை காப்பாற்றியதாக  காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு முதல்வர் முக ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு கடிதம் வழங்கினார்.

இந்நிலையில்  சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இளைஞர் உதயா சிகிச்சை  பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இந்த செய்தி இணையத்தில் பரவ தொடங்கிய நிலையில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.