×

ஞாபகம் இருக்கா?.. இளைஞரை தோளில் தூக்கி... துணிச்சல் இஸ்பெக்டர் ராஜேஸ்வரிக்கு அண்ணா பதக்கம்!

 

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை ஏற்படுத்திய தாக்கத்தை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. மீண்டும் சென்னையை வெள்ளம் புரட்டியெடுத்தது. ஆனால் அதேசமயம் ராஜேஸ்வரி என்ற பெயரையும் நம்மால் மறக்க முடியாது.  டி.பி.சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஸ்வரி செய்த மனிதாபிமான செயல் தான் தமிழர்களின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்துள்ளது. அதனை அழிக்க முடியாது. கடந்தாண்டு நவம்பர் 11ஆம் தேதி ஒட்டுமொத்த சென்னையே வெள்ளத்தில் தத்தளித்த பேரிடர் காலக்கட்டம் அது.

அன்று காலையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு ஒன்று வருகிறது. அதில், பேசிய நபர் கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக பதைப்பதைப்புடன் கூறுகிறார். உடனே இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி காவல் துறையினருடன் அங்கு செல்கிறார். தகவல் வந்ததூ போலவே  கல்லறைகளுக்கு நடுவே இளைஞர் ஒருவர் அசைவற்ற நிலையில் கிடந்தார். அவரை சோதனை செய்ததில் அவருக்கு உயிர் இருப்பதை அறிந்துகொண்டார் ராஜேஸ்வரி.

இதையடுத்து சற்றும் யோசிக்காத தனது தோளில் தூக்கி போட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சில நாட்களுக்கு பின் உயிரிழந்தார். அவர் ஷெனாய் நகரைச் சேர்ந்த உதயா (25) என்பதும், அவர் கல்லறையில் தங்கி பணி செய்துவந்தவர். இருப்பினும் ராஜேஸ்வரி அந்த இளைஞரை தோளில் தூக்கிச் சென்ற வீடியோவும் புகைப்படமும் இணையத்தில் வெளியாகி பெரும் பாராட்டுகளை வாங்கி குவித்தது. 

மனிதாபிமான செயல்பாடு தமிழக காவல் துறையினர் அனைவருக்கும் பெருமை சேர்த்துள்ளது என்று முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். அத்துடன், ராஜேஸ்வரியை நேரில் அழைத்து அவரது சேவையைப் பாராட்டிச் சான்றிதழும் வழங்கினார். இந்நிலையில், காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி இன்று (ஜனவரி 26, குடியரசு தின விழாவில்) அண்ணா பதக்கம் பெற்றார். அவர் உட்பட 8 காவலர்கள் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கத்தைப் பெற்றனர்.