×

இன்ஃப்ளூயன்சா  காய்ச்சல் இல்லாத தமிழகமே இலக்கு  - அமைச்சர் மா. சுப்பிரமணியன்.. 

 

தமிழ்நாட்டில் இன்ஃப்ளூயன்சா காய்ச்சலே இல்லை என்ற நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை சைதாப்பேட்டையில்  தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்  நேற்று நடைபெற்றது.  இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்த பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் H3N2 என்னும் இன்ஃப்ளூயன்சா வைரஸ் காய்ச்சல்  பரவியிருப்பதாக கூறினார்.  இதுவரை 33,544 சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும், அதன்மூலம் 14.13 லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்திருப்பதாகவும்  தெரிவித்தார்.  

இன்ஃப்ளூயன்சா வைரஸ்  காய்ச்சல் பரவல் அதிகமாக இருப்பதால்,  விரைவில் 10 ஆயிரம் சுகாதார பணியாளர்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தப்படும்  என்று கூறினார்.  மேலும், தமிழ்நாட்டில் தான்  இந்தியாவில் முதன் முறையாக அரசு தரப்பில்  இன்ஃப்ளூயன்சா காய்ச்சல் தடுப்பூசி போடப்படுகிறது என்று சுட்டிக்காட்டிய சுகாதாரத்துறை அமைச்சர்,   விருப்பம் உள்ளவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என்று  தெரிவித்தார்.