☰
×

முதல்வர் விஜய் வீட்டின் பின்புறம் வீசப்பட்ட குழந்தை! கள்ளக்காதலால் நடந்த விபரீதம் 

 

முதல்வர் விஜயின் வீட்டின்பின்புறம் ரோட்டில் வீசப பட்ட குழந்தை கள்ளக்காதலில் பிறந்தது என தெரியவந்துள்ளது. மேலும் அந்த குழந்தையை ஏற்க தாய் மறுத்துவிட்டார்.

சென்னை, நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர், முதலமைச்சர் விஜய் வீட்டின் பின் புறம் 4-ஆவது குறுக்குத்தெரு சந்திப்பில் நேற்று அதிகாலை சாக்கு மூட்டையில் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று ஆதரவற்ற நிலையில், அழும் சத்தம் கேட்டுள்ளது. 6 மணியளவில் அப்பகுதியில் நடைப்பயிற்சி மேற்கொண்ட நபர் ஒருவர், குழந்தை அழுகை சத்தம் கேட்டு சாக்கு மூட்டையைப் பிரித்துப் பார்த்துள்ளார். அதில் பச்சிளம் பெண் குழந்தை இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக நீலாங்கரை காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நீலாங்கரை போலீசார் குழந்தையை பத்திரமாக மீட்டனர்.

இச்சம்பவம் குறித்து குழந்தைகள் நல குழுவிற்கு தகவல் தெரிவித்த போலீசார், குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தனர். பின்பு குழந்தைகள் நல குழுமத்தினரால் மீட்கப்பட்ட பெண் பச்சிளம் குழந்தையை சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். பின்னர் குழந்தையைக் கைவிட்டுச் சென்ற பெண் யார் என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர். சிசிடிவி காட்சியில் இரு பெண்கள் இரவு நேரத்தில் யாரும் இல்லாத நேரத்தில் சாலைக்கு வந்து குழந்தையை சாக்கு பையில் சாலையோரம் வைத்து விட்டு சென்றது பதிவாகி இருந்தது.

குழந்தையை அம்மா கை காட்டும் இடத்தில் வைத்து விட்டு குழந்தையின் தாய் அழுத்தபடியே வீட்டிற்கு சென்ற சம்பவம் சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து விசாரணையில் சாலையோரம் வீசி சென்றது நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரை சேர்ந்த திருமணம் ஆகாத இளம்பெண் என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியானது. அதாவது அந்த இளம்பெண் அவரது ஆண் நண்பருடனான உறவு மூலம் கர்ப்பமடைந்து, சில நாட்களுக்கு முன்பு வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்ததாக தெரிவித்துள்ளார். ஆனால் குழந்தைக்கும் தனக்கும் ஆண் நண்பர் உரிய ஆதரவும் பாதுகாப்பும் அளிக்காததால் குழந்தையை சாலையில் விட்டுச் சென்றதாக கூறியுள்ளார். மேலும் பிரசவம் பார்த்த மருத்துவர் மற்றும் ஆண் நண்பரின் விவரங்களை அளிக்க அவர் மறுத்து விட்டார்.

இதையடுத்து நீலாங்கரை போலீசார் இளம்பெண் மற்றும்அவரது தாயார் இருவரையும் ஆலந்தூரில் உள்ள குழந்தைகள் நலக் குழு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஆய்வாளர் சீலா முன்னிலையில் நடைபெற்ற விசாரணையில் தனக்கு திருமணமாகாததால் குழந்தையை வளர்க்க விருப்பமில்லை என குழந்தையின் தாய்கூறியதாக கூறப் படுகிறது. அதற்குப் பதிலளித்த ஆய்வாளர் குழந்தை பிறந்து 60 நாட்கள் முடிந்த பின்னரே சட்டப்பூர்வமாக குழந்தைகள் நல குழு பொறுப்பில் ஏற்று தத்துக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியும் என தெளிவுபடுத்தினார். அதனடிப்படையில் 60 நாட்களுக்குப் பிறகு குழந்தையை குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைப்பதாக எழுத்துப்பூர்வமாகக் கடிதம் எழுதி கொடுத்துள்ளனர். மீட்கப்பட்ட பச்சிளம் பெண் குழந்தை தற்போது எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இன்னும் நான்கு நாட்களில் குழந்தையை பகல்நேரப் பராமரிப்புமையத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.