விமான நிலையத்தில் பரபரப்பு: மின் கம்பத்தில் மோதிய இண்டிகோ விமானம்..!
நவி மும்பையில் இருந்து 6E 225 (VT-NOG) என்ற இண்டிகோ விமானம் ஸ்ரீநகருக்கு இயக்கப்பட்டது. விமானம் குறிப்பிட்ட நேரத்தில் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. அப்போது பயணிகள் வெளியேறுவதற்கு வசதியாக விமான நிறுத்துமிடம் எண்-6க்கு விமானம் நகர்த்தப்பட்டது.
அப்போது எதிர்பாராத விதமாக விமான நிலையத்தில் இருந்த 'விஷுவல் டாக்கிங் கைடன்ஸ் சிஸ்டம்' (VDGS) கம்பத்தின் மீது விமானம் மோதியது. இதில் விமானத்தின் முன்பக்கம் சிறிய அளவில் சேதமடைந்தது. ஆனால் பயணிகள் மற்றும் விமான குழுவினருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக இந்திய விமான நிலைய ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்துக்கு பிறகு விமானத்தில் இருந்து எப்போதும் போலவே சாதாரண ஏணியை பயன்படுத்தியே பயணிகள் வெளியேற்றப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும். விசாரணை முடிந்த பிறகே விபத்துக்கான காரணங்கள் தெரியவரும்" என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே விபத்துக்கு பிறகு ஸ்ரீநகர் விமான நிலையத்தின் பணிகள் வழக்கம்போல் தொடர்ந்தன. விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடு ஆகியவை அட்டவணைப்படியே நடைபெற்று வருவதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.