இண்டிகோவின் அதிரடி சலுகை : கைப்பை மட்டும் எடுத்து வந்தால் விமானத்தில் கட்டண சலுகை..!
நாட்டின் மிகப்பெரிய விமான போக்குவரத்து நிறுவனமாக, 'இண்டிகோ உள்ளது. இந்நிறுவனம், 'எகானமி' எனப்படும், சாதாரண வகுப்பு பயணியருக்கு புதிய கட்டண திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
வழக்கமாக, 'எகானமி வகுப்புக்கு ஏழு கிலோ, கேபின் லக்கேஜ்' எனப்படும், கைப்பை மற்றும் 15 முதல் 20 கிலோ, 'செக் --- இன் லக்கேஜ் எனப்படும், பெட்டிகளை தனியாக கொண்டு வரும் வசதி வழங்கப்படும்.
'இண்டிகோ'வின் 'லைட்' கட்டண திட்டத்தில் ஏழு கிலோ வரையிலான கைப்பை மட்டும் எடுத்துச் செல்வோருக்கு அடிப்படை கட்டணத்தை குறைத்துள்ளனர்.
இது குறித்து, 'இண்டிகோ' நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், 'குறைந்த பைகளுடன் பயணித்து, தங்களுக்கு தேவையான சேவைகளுக்கு மட்டும் கட்டணம் செலுத்த விரும்பும் பயணியருக்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.
'சந்தை தேவைகளுக்கு ஏற்ப சேவைகளை மாற்றியமைப்பதுடன், விமானப் பயணத்தை குறைந்த செலவில் வழங்க வேண்டும் என்பதே நோக்கம்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே, 'ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்' நிறுவனம், கைப்பை மட்டும் எடுத்துச் செல்லும் பயணியருக்கான கட்டணத்தை குறைத்து உள்ளது.