×

நடுவானில் இன்ஜின் கோளாறு: சென்னையில் அவசரமாகத் தரையிறங்கிய இண்டிகோ விமானம்..!!

 

சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு மேற்குவங்க மாநிலம், கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து இரவு 10 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் புறப்பட்டு வழக்கமாக இரவு 11:30 மணிக்கு வந்தடையும். அந்த வகையில் நேற்று இரவு கொல்கத்தாவில் இருந்து வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இரவு 11.30 மணியளவில், சென்னையில் தரையிறங்க வந்து கொண்டிருந்தது.

அந்த விமானத்தில் 224 பயணிகள் மற்றும் ஐந்து விமான ஊழியர்கள் உள்பட 229 பேர் இருந்தனர். இந்தநிலையில் இந்த விமானம் சென்னையை நெருங்கிக் கொண்டிருந்த போது, விமானத்தின் இடது பக்க இயந்திரத்தில் திடீரென என்ஜின் செயலிழந்து, இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது.

மேலும், சிறிய அளவில் எண்ணெய் கசிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த இண்டிகோ விமானி, விமானத்தை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்படும் என உணர்ந்து, உடனடியாக அவசரமாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், ஓடுபாதை பகுதியில் அவசர நிலையை அறிவித்தனர். மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தீயணைப்பு வண்டிகள், மருத்துவ குழுவினர் உட்பட அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் துரிதமாக செய்யப்பட்டன. அதுவரையில் அந்த விமானம் தரையிறங்காமல் வானில் தொடர்ந்து வட்டமடித்துக் கொண்டு இருந்தது.

தொடர்ந்து, அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்து முடித்த பின்பு, விமானம் சென்னையில் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி விமானம் இரவு 11.37 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. அதில் இருந்த 224 விமான ஊழியர்கள் உட்பட 229 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். இதனைத்தொடர்ந்து, விமானப் பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி பழுது பார்க்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த விமானம் மீண்டும் உடனடியாக வானில் பறக்க தகுதியற்றது என்று தெரியவந்த நிலையில், நள்ளிரவு 12 மணி அளவில் அந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் இயங்க முடியாத நிலையில் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து அந்த விமானம் நடைமேடைக்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் நேற்று நள்ளிரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து முழுமையாக விசாரணை நடத்துவதற்கு டெல்லியில் உள்ள சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டி.ஜி.சி.ஏ) உத்தரவிட்டுள்ளது.