×

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்..! சென்னை ஐ.சி.எப். தயாரிப்பில் புதிய சாதனை..!

 

நாட்டிலேயே முதல் முறையாக, சென்னை ஐ.சி.எப்., ஆலையில், 118 கோடி ரூபாய் செலவில், ஹைட்ரஜன் ரயில் தயாரிக்கப்பட்டது.

இந்த ரயில், நீராவியை மட்டுமே வெளியிடுவதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது. மின்சாரத்தில் இயங்கும் ரயிலை விட, இது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்தது. அதிகபட்சமாக, 50 முதல் 80 கி.மீ., துாரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் இந்த ரயில், ரயில்வே வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, ஹரியானா மாநிலம், ஜிந்த் - லலித் கேரா இடையே, பல்வேறு கட்ட சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை ஓட்டத்தின், முக்கிய பகுதியாக, மணிக்கு 70 கி.மீ., வேகத்தில், நேற்று முன்தினம் இயக்கப்பட்டது. சோதனை வெற்றிகரமாக முடிந்தது.

இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில்வேயில் அடுத்த கட்ட தொழில்நுட்பமாக, ஹைட்ரஜன் ரயில் இயக்கத்தில், கவனம் செலுத்தப்படுகிறது. இதற்கான, அனைத்து கட்ட சோதனைகளும் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு வருகின்றன . இந்த ரயிலில், 10 பெட்டிகள் இருக்கும். ஒவ்வொரு பெட்டியிலும், 84 பேர் பயணம் செய்யலாம். ரயில் இன்ஜின், 1,200 குதிரை திறன் கொண்டது; அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ., வேகத்தில் செல்லும். மேலும், பல்வேறு கட்ட பாதுகாப்பு சோதனை நடத்தப்படும். பின்னர், ரயில்வே பாதுகாப்பு ஆணையரகம் ஒப்புதல் பெற்று, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.