×

திண்டுக்கல்லில் இந்தியாவின் முதல் தேவாங்கு காப்பகம்: அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினத்திற்கு புதிய வாழ்வு!

 

'தேவாங்கு' எனப்படும் அரிய வகை உயிரினத்தைப் பாதுகாக்க, திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் சுமார் 16.5 கோடி மதிப்பீட்டில் அதிநவீனப் பாதுகாப்பு மையத்தை அமைத்துள்ளது தமிழக அரசு.தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் இந்த மையத்தைத் திறந்து வைத்தார். மரங்களிலேயே தனது வாழ்நாளைக் கழிக்கும், பூச்சிகளை உண்ணும் பழக்கம் கொண்ட இந்தச் சிறிய பாலூட்டி இனத்தைப் பாதுகாப்பதில் இந்த மையம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகும்.

இந்த விழாவில், தேவாங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிரத்யேக இணையதளம் மற்றும் ஒரு கைபேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தேவாங்கு பாதுகாப்பு குறித்த நேரடித் தகவல்களைப் பெற முடியும். இந்த மையம் வெறும் அருங்காட்சியகமாக மட்டுமில்லாமல், ஒரு வாழும் ஆய்வகமாக செயல்படும். தேவாங்குகளின் வாழ்க்கை முறை மற்றும் சூழலியல் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ளத் தகவல் தொடர்பு மையம் மற்றும் பார்வையாளர்கள் மையம் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான விளையாட்டுப் பகுதி, சாகச மண்டலம் மற்றும் காடுகளுக்குள் பாதுகாப்பாகச் சென்று வரக் குறிப்பிட்ட நடைபாதைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சூழல், சுற்றுலாவை (Eco-tourism) மேம்படுத்துவதன் மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்கள் வன வளங்களைச் சார்ந்து இருப்பதைத் தவிர்க்கவும் இந்தத் திட்டம் வழிவகை செய்கிறது. தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் விதி 110-ன்கீழ் அறிவித்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பைத் தொடர்ந்து, திண்டுக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் சுமார் 11,806.56 ஹெக்டேர் நிலப்பரப்பு கடவூர் தேவாங்கு சரணாலயமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே இந்த நவீனப் பாதுகாப்பு மையம் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இரவில் மட்டுமே நடமாடும் பழக்கம் கொண்ட தேவாங்குகள், வாழிட இழப்பு மற்றும் சில மூடநம்பிக்கைகளால் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருகின்றன.

மைசூர் பல்கலைக்கழகத்தின் டாக்டர் மேவா சிங் மற்றும் 'நியாஸ்' அமைப்பின் டாக்டர் சிந்து ராதாகிருஷ்ணா உள்ளிட்ட வனவிலங்கு நிபுணர்கள், இந்த மையம் தேவாங்குகளின் நடத்தையை அறிவியல் பூர்வமாகப் புரிந்துகொள்ளப் பெரும் உதவியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர். கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் ச. சரவணன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பெருமளவில் கலந்து கொண்டனர். சுற்றுலாப் பயணிகளையும் மாணவர்களையும் வரவேற்க இந்த மையம் இப்போது முழுமையாகத் தயாராக உள்ளது. அடுத்த தலைமுறைக்கு இயற்கையின் முக்கியத்துவத்தைக் கொண்டு செல்லும் "சுற்றுச்சூழல் போராளிகளை" உருவாக்க இந்த மையம் ஒரு அடித்தளமாக அமையும் என அரசு தெரிவித்துள்ளது.