×

இன்று விண்வெளிக்கு செல்கிறார் இந்திய வம்சாவளி வீரர் அனில் மேனன்!

 

விண்வெளி வீரர் கர்னல் அனில் மேனன், ஐ.எஸ்.எஸ். எனப்படும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு முதல் முறையாக இன்று பயணம் செய்கிறார்.

மருத்துவம், ராணுவம், மனித விண்வெளிப் பயணம் ஆகிய துறைகளில் பட்டப் படிப்பை முடித்துள்ள இவர் அவசர மருத்துவ நிபுணரும் ஆவார்.

கஜகஸ்தானில் உள்ள பைக்கானூர் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ரசிய விண்வெளி வீரர்களான பியோட்டர் டுப்ரோவ், அன்னா கிகினா ஆகியோருடன் இணைந்து ரோஸ்கோஸ்மோஸ் சோயுஸ் எம்.எஸ். - 29 விண்கலத்தில் இப்பயணத்தை மேற்கொள்கிறார்.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் எட்டு மாதம் வரை தங்கும் இவர்கள், நீண்ட காலம் விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் மனிதர்களின் உடலில் ஏற்படும் விளைவுகளைப் பற்றி ஆராய்ச்சியை மேற்கொள்ளவுள்ளனர்.

நாசாவின் அறுவைச் சிகிச்சை நிபுணராக 2014ஆம் ஆண்டு சேர்ந்த இவர், சர்வதேச விண்வெளி வீரர்களுக்கு உதவி வந்தார். பின்னர், 2018ஆம் ஆண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தில் விண்கலங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுவந்தார்.

நாசாவின் விண்வெளி வீரராக 2021ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகள் பயிற்சித் திட்டத்தை நிறைவுசெய்துள்ள அனில் மேனன், தனது முதல் விண்வெளிப் பயணத்தை இன்று மேற்கொள்கிறார்.