இலங்கையில் கரை ஒதுங்கிய இந்திய ராக்கெட் பாகங்கள்
இந்திய ராக்கெட் பாகங்கள் இலங்கை கடலில் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கை திருகோணமலை மாவட்டம், சம்பூர் காவல் பிரிவுக்குட்பட்ட சம்பூர்–மலைமுந்தல் கடற்பரப்பில், இந்தியாவைச் சேர்ந்ததாகக் கருதப்படும் ராக்கெட்டின் உதிரிபாகம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது. இந்த ராக்கெட் பாகங்கள் திருகோணமலை கடற்பரப்பில் மிதந்து வந்த நிலையில், சம்பூர்–மலைமுந்தல் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட பகுதியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கை கடற்படையைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கரை ஒதுங்கியுள்ள இந்த உதிரிபாகம், விண்வெளிக்கு ஏவப்படும் ராக்கெட்டின் பகுதியாக இருக்கலாம் என்றும், ராக்கெட் மேலே பறக்கும் போது பிரிந்து விழும் துணை பாகங்களில் ஒன்றாக இருக்கலாம் என்றும் சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த சம்பவம் குறித்து சம்பூர் பொலிஸார் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் பொதுமக்கள் அணுகுவதற்கு தற்காலிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.