ரெயில்வேயின் பசுமை முயற்சி: ரெயில் பெட்டிகளில் 'சோலார்' மின் உற்பத்தி..!!
ரெயில்வேக்கு சொந்தமான இடங்களில், சூரிய சக்தி மின் சாதனம், காற்றாலைகள் அமைத்து, மின் உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, ரெயில் நிலையங்களின் மேற்கூரைகளில், தனியார் பங்களிப்போடு சூரிய சக்தி மின் சாதனங்கள் பொருத்தப்பட்டு, மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
அடுத்த கட்டமாக, ரெயில் பெட்டிகளில் சூரிய சக்தி மின் சாதனங்கள் பொருத்தி, மின்சாரம் தயாரிக்கும் முயற்சி தொடங்கப்பட்டு உள்ளது. வடக்கு மத்திய ரெயில்வேயில், இரண்டு ரெயில் பெட்டிகளின் மேற்பகுதியில், 'சோலார்' எனப் படும் சூரிய சக்தி மின் சாதனம் பொருத்தி, மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் தேர்வு செய்யப்பட்ட இரண்டு ரெயில் பெட்டிகளின் மேற்கூரைகளில் இது செயல்படுத்தப்பட்டுள்ளது.
இதில் உற்பத்தியாகும் மின்சாரம், பேட்டரிக்கு செல்லும். பின், மின் விளக்குகள், மின் விசிறிகள் மற்றும் மொபைல் சார்ஜிங் வசதிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. சோதனை தற்போது, அடிப்படையில், இரண்டு பெட்டிகளில் சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு, பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இதையடுத்து, மாதந்தோறும் இரண்டு பெட்டிகளில், சூரிய சக்தி மின் சாதனங்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் நாடு முழுதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.