×

இந்திய ஹாக்கி அணியின் 'ஜெர்சி' காவி நிறத்திற்கு மாற்றம்..?

 

சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், பெல்ஜியம், நெதர்லாந்தில், உலக கோப்பை ஹாக்கி தொடர் (ஆக. 15-30) நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் இந்திய ஆண்கள், பெண்கள் அணியினருக்கு, வழக்கமான நீல நிற ஜெர்சிக்கு பதிலாக காவி நிறத்தினாலான புதிய ஜெர்சி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு, முன்னாள் இந்திய கேப்டன்களான விரேன் ராஸ்கின்ஹா, பாஸ்கரன், அஜித் பால், பர்கத் சிங், தன்ராஜ் பிள்ளை உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதுகுறித்து ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் டிர்கே கூறியது: இந்திய அணியின் ஜெர்சி தொடர்பாக நிறைய விமர்சனம் எழுகின்றன. ஜெர்சியின் நிறத்தை மாற்றுவது முதல்முறை அல்ல. ஏற்கனவே 2014ல் மஞ்சள், 2018ல் வெளிர் நீல நிறம் என மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

இம்முறை யாருடைய அழுத்தத்தினாலோ அல்லது கட்டளையின் பேரிலோ மாற்றம் செய்யப்படவில்லை. நமது வீரர்கள், பயிற்சியாளர்களின் விருப்பப்படியே மாற்றம் செய்துள்ளோம்.ஹாக்கி மைதானத்தின் ஆடுகளம் நீல நிறத்தில் இருப்பதால், ஜெர்சியும் நீல நிறத்தில் இருந்தால் வீரர்களுக்கு சிரமமாக இருக்கும். எனவே மஞ்சள் அல்லது காவி நிறம் பரிசீலிக்கப்பட்டது. முடிவில், தேசிய கொடியுடன் தொடர்புடைய காவி நிற ஜெர்சி தேர்வு செய்யப்பட்டது. இது, நிரந்தரம் அல்ல. வரும் காலத்தில் வீரர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஜெர்சியின் நிறம் மாற்றம் செய்யப்படும்.ஜெர்சி தொடர்பான விமர்சனங்களை கடந்து உலக கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியினருக்கு, நமது ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு திலீப் டிர்கே கூறினார்.