இந்தியாவுக்கு ஒரே நாளில் இரு தங்கம்; ஜூடோ போட்டியில் வீராங்கனை அஷ்மிதா டெ சாதனை..!
கிளாஸ்கோவில் காமன்வெல்த் 2026 போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், மகளிருக்கான ஜூடோ 48 கிலோ எடை பிரிவில் இறுதி போட்டி நடைபெற்றது. இந்தியா தரப்பில் 22 வயதே ஆன அஷ்மிதா டெ, கனடாவின் ஹைடி குவாச் ஆகியோர் மோதினர்.பரபரப்பான இந்த போட்டியில் இந்திய வீராங்கனை அஷ்மிதா டெ தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். ஆட்டத்தில் இருவரும் 1க்கு 1 என சமமான புள்ளிகள் பெற்றனர். இதனால் போட்டியானது கோல்டன் ஸ்கோர் முறைக்கு நகர்ந்தது.முடிவில் 2க்கு 1 என்ற புள்ளி கணக்கில் கனடாவின் ஹைடி குவாச்சை தோற்கடித்து அஷ்மிதா டெ தங்கம் வென்றார்.
அவரின் வெற்றியால் காமன்வெல்த் ஜூடோ போட்டியில் இந்தியா முதல் தங்கத்தை பெற்றுள்ளது.
முன்னதாக அரையிறுதியிலும், ஸ்காட்லாந்தின் சாரா அட்லிங்டனை கோல்டன் ஸ்கோர் முறையில் வீழ்த்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.ஆடவருக்கான ஜூடோ போட்டியில் 60 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் ஹர்ஷ் சிங் தங்கம் வென்றார். இந்த வெற்றியை தொடர்ந்து ஜூடோ போட்டியில் ஒரே நாளில் இந்தியாவுக்கு 2 தங்கப்பதக்கங்கள் கிடைத்துள்ளன.
பதக்க பட்டியலில் இந்தியா 5 தங்கம், 10 வெள்ளி மற்றும் 4 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களை வென்று இருக்கிறது.