MMA பிரிவில் முதல் முறையாக பதக்கம் வென்ற இந்தியா..!!
ஜப்பானில் நடைபெற்று வரும் 20-வது ஆசிய விளையாட்டு போட்டிகளின் 60 கிலோ மகளிர் எம்.எம்.ஏ பிரிவில் இந்தியாவின் சுச்சிகா வெண்கல பதக்கம் வென்று வரலாறு படைத்துள்ளார். ஆசிய விளையாட்டு போட்டியின் எம்.எம்.ஏ பிரிவில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இது என்பதால் அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இவரின் இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றி, இந்தியாவில் கலப்பு தற்காப்பு கலைகளில் ஆர்வமுள்ள இளம் வீராங்கனைகளுக்குப் புதிய ஊக்கத்தை அளித்துள்ளது.
ஜப்பானின் நகோயாவில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்துள்ளது.கலப்பு தற்காப்பு கலைகள் (எம்எம்ஏ) போட்டியில் மகளிருக்கான 60 கிலோ எடைப்பிரிவு அரையிறுதியில் சுச்சிகா தரியால், சிங்கப்பூரின் ஹுய் ஹூன் தியோவை எதிர்கொண்டார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் சுச்சிகா 0-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இதனால் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை அவர் இழந்தார்.இருப்பினும், அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம் சுச்சிகா ஏற்கனவே வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்திருந்தார்.ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் எம்.எம்.ஏ. பிரிவில் இந்தியா வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும்.இதன் மூலம் சுச்சிகா தரியால், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கலப்பு தற்காப்பு கலைகள் பிரிவில் இந்தியாவுக்காக வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.