வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி 3-வது டி20-யில் இந்தியா வெற்றி..!
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்திய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. 224 ரன்கள் இலக்கை துரத்திய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், நமன் தீர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி வெற்றிக்கு உதவினர். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த 3 வது போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.ஆட்டத்தின் 2வது ஓவரிலேயே இந்திய துவக்க வீரர் சஞ்சு சாம்சன் (3) சொற்ப ரன்னில் ஏமாற்றம் அளித்தார். அதன்பிறகு, ஜோடி சேர்ந்த அபிஷேக் ஷர்மா, இஷான் கிஷான் சிக்சர் மழை பொழிந்தனர். 8வது ஓவரிலேயே இந்தியா 100 ரன்னை கடந்தது.18 பந்தில் அபிஷேக் ஷர்மா அரைசதம் விளாசினார். மறுமுனையில் இஷான் கிஷான் 37 ரன்னில் விக்கெட் இழந்தார். கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் ஒரு ரன்னில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் ஷர்மா 30 பந்தில் 69 ரன்னுக்கு ( 4s -6, 6s - 5) ஆட்டமிழந்தார். அதன்பிறகு, திலக் வர்மா (28), நிதிஷ் ரெட்டி (21), அக்ஷர் படேல் (20) ஓரளவுக்கு ரன் சேர்த்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 223 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பொறுத்தவரையில் சேஸ், ஷமர் ஜோசப், ஷ்பிரிங்கர் தலா 2 விக்கெட்டையும், கீமோ பால், மோட்டி தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ஷாய் ஹோப் 5 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். அதன்பிறகு, பூரன்,ஹெட்மையர் அதிரடியாக விளையாடி ரன் சேர்த்தனர். பூரன் 42 ரன்னிலும், ஹெட்மையர் 43 ரன்னிலும் நமன்தீர் பந்தில் அடுத்தடுத்து அவுட்டாகினர். ரோவ்மன் பவுலும் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால், அந்த 105 ரன்னுக்கு முக்கிய 4 விக்கெட்டை இழந்தது.இதனையடுத்து வந்த ரூதர்போர்டு, 32 ரன், சாம்ப்சன் 21 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆக, கிமோ பால் 10 ரன்னில் வெ ளியேறினார். ஸ்பிரிங்கர் 35 ரன், ராஸ்டன் சாஸ் 5 ரன்னும் சேர்த்த போதிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவரில் 7 விக்கெட்டுக்களை இழந்து 209 ரன்னுக்குள் சுருண்டது.
இந்நிலையில் இந்திய அணி 14 ரன்னில் வெற்றி பெற்றது.
5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னணியில் உள்ளது.