×

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்தியா அசத்தல்!

 

இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. ராஞ்சியில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற, ராய்ப்பூரில் நடந்த இரண்டாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இறுதி மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 47.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டி காக் 106 ரன்கள் அடித்தார். இந்தியப் பந்துவீச்சாளர்களில் குல்தீப் யாதவ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

271 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சை திறமையாக எதிர்கொண்டு அணிக்கு வலுவான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இருவரும் தங்கள் அரைசதங்களைப் பதிவு செய்து அசத்தினர். இந்த அபாரமான இணை முதல் விக்கெட்டுக்கு 155 ரன்கள் சேர்த்த நிலையில், ரோகித் சர்மா 75 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, ஜெய்ஸ்வாலுடன் விராட் கோலி இணைந்தார்.

விராட் கோலி ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, மேற்கொண்டு விக்கெட்டுகளை இழக்காமல் இந்த ஜோடி விரைவாக இந்திய அணியை வெற்றியின் பாதைக்கு இட்டுச் சென்றது. தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த இவர்கள் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார், அதே சமயம் விராட் கோலியும் தனது அரைசதத்தை நிறைவு செய்தார். தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் இந்திய அணியை எந்த வகையிலும் அச்சுறுத்தவில்லை.

இறுதியில், இந்திய அணி வெறும் 39.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 271 ரன்கள் அடித்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜெய்ஸ்வால் 116 ரன்களுடனும், விராட் கோலி 65 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். தென் ஆப்பிரிக்கா தரப்பில் கேஷவ் மகராஜ் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி சாதனை படைத்தது.