ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் போராட்டம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
இன்று காலை சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், திட்டமிட்டபடி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ளது.பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாட்டை களைய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கத்தினர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வரும் ஜனவரி 6 ஆம் தேதி காலவரையற்ற வேலைநிறுத்தத்தை ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசு ஊழியர்கள் சங்க அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், நான்கரை ஆண்டு காலமாக தமிழ்நாடு அரசு எங்களுடன் எந்த விஷயத்தை விவாதித்ததோ அதையே மீண்டும் விவாதித்தது தங்களுக்கு வருத்தம் அளிப்பதாக அவர் தெரிவித்தார். இன்று நடைபெற்ற பேச்சு வார்த்தை போராட்ட களத்தை மேலும் சூடாக்கி உள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன், “இன்று நடைபெற்ற அமைச்சர்களுடான பேச்சு வார்த்தையில் ஆலோசனை கூட்டமாக கருத்துக் கூட்டமாக நடைபெற்றது கண்டிக்கத்தக்கது என்றும் ஜாக்டோ ஜியோ கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தி வரும் சூழலில் பேச்சுவார்த்தை என்று அழைத்து மீண்டும் முதலில் இருந்து கோரிக்கைகளை சொல்லுங்கள் என்கிறார்கள் என்றும் போராட்டங்கள் நடக்கும் சங்கங்களை தவிர்த்து ஒரு சில சங்கங்களை மட்டும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அவர் கூறினார். மேலும் ஆட்சி முடியும் திருவாயில் நடத்தப்பட்ட இந்த பேச்சுவார்த்தை என்பது இறுதி கட்ட பேச்சு வார்த்தையாக இருக்கும் என்றும் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் என்று நினைத்தபோது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அவர் கூறினார். மேலும் பொங்கல் சமயத்தில் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர் , ஜாக்டோ ஜியோ பல்வேறு காலங்களில் போராட்டங்களை நடத்தி வந்து விசேஷ நாட்களில் சிறையில் இருந்து போராடி வந்ததாகவும் வரும் பொங்கல் சமயத்தில் அரசு சிறைச்சாலையை பரிசாக அளித்தால் அதனை பொங்கல் பரிசாக ஏற்றுக் கொள்வதாக அவர் கூறினார். அதேபோல இந்த அரசு ஐஏஎஸ் அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும் , அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற விடாமல் அதிகார வர்க்கம் (IAS அதிகாரிகள்) தடுத்து வருவதாக குற்றம் சாட்டினார். அரசு நினைத்தால் கூட அதிகாரிகளின் பிடியில் இருந்து மீள முடியவில்லையா என்ற சந்தேகம் எழுவதாக அவர் தெரிவித்தார். மேலும் அரசு உரிய நடவடிக்கை எடுக்காத சூழலில் போராட்டத்தை வலுப்படுத்த உள்ளதாகவும் அவர் கூறினார்.மேலும் , நாங்கள் எந்த அரசுக்கும் ஆதரவானவர்கள் அல்ல என்றும் எதிரானவர்களும் அல்ல என்றார் தேர்தல் நேரத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ நினைக்கவில்லை என்று அவர் கூறினார்.