×

"திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு" -  முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

 

திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 17% லிருந்து, 31%ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெற தகுதியுள்ள ஏனைய  பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தியும், சி, டி பிரிவு பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கவும் தமிழக முதல்வர் ஸ்டாலின்  அண்மையில் உத்தரவிட்டார் . இதற்காக 8,894 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அரசுக்கு நிதி சுமை உள்ள இந்த சூழலிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலன்கருதி அகவிலைப்படி உயர்த்தப்பட்டதற்கு  பலரும் நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில் திருக்கோயில்களில் பணியாற்றும் நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31சதவீதமாக உயர்த்தி தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேல் ஆண்டு வருவாய் பெறும் திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படி 17%ல் இருந்து, 31%ஆக உயர்த்தி வழங்கப்படும் இதன் மூலம்  முழுநேரம், பகுதிநேரம் ,தொகுப்பூதிய பணியாளர்கள் உள்ளிட்ட திருக்கோயில்களில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் ரூ.1,000ஆக வழங்கப்பட்டு வந்த பொங்கல் கருணைக்கொடை தொகை, இவ்வாண்டில் இருந்து ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும்  என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.  அதன்படி அர்ச்சகர்கள் மற்றும் சீட்டு விற்பனையாளர்களுக்கு ரூ.2, 500 , காவல் பணியாளர்களுக்கு ரூ.2,200 , துப்புரவு பணியாளர்களுக்கு ரூ. 1,400 மாத சம்பளம் உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 10,000 திருக்கோயில் பணியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும்.  இதனால் ஆண்டொன்றுக்கு ரூபாய் 25 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்றும் தமிழக அரசு தனது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளது