×

மத்திய பட்ஜெட்: வருமான வரிச் சலுகைகள், 150 நாள் வேலை அறிவிக்க வேண்டும்!
 

 

பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைத்தல், தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்கக் கட்டணத்தைக் குறைத்தல் குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் அறிவிக்க ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய அரசின் 2022-23 ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு  இன்னும் இரு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், அது குறித்த மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்து உள்ளன. ஒருபுறம் கிராமப்புற பொருளாதாரம் நலிவடைந்து வரும் நிலையில், மறுபுறம் வரிச்சுமைகள்  அதிகரித்து வருகின்றன. இவற்றின் பாதிப்புகளில் இருந்து ஏழை மற்றும் நடுத்தர மக்களை மீட்பதற்கான திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் இடம் பெற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

இந்தியா உலகின் முன்னணி பொருளாதாரங்களில் ஒன்று என்றாலும் கூட, இந்தியர்களின் பொருளாதாரம் சமச்சீரான ஒன்று அல்ல. இந்தியாவின் சமச்சீரற்ற தனிநபர் வருமானம் அதன் சந்தையில் தாக்கத்தை  ஏற்படுத்துகிறது. மாத வருவாய் ஈட்டுபவர்களின் பெரும்பான்மையினரின் வருவாய் உயருவதில்லை; அதிலும் குறிப்பாக கொரோனா பாதிப்புகளுக்குப் பிறகு மாத ஊதியம் சரிவை சந்தித்து வருகிறது. ஆனால், நாட்டின் பணவீக்கம் உச்சத்தை அடைந்திருப்பதால், மக்களுக்கு கிடைக்கும் ஊதியத்தின்  உண்மையான மதிப்பு, அதன் கரன்சி மதிப்புக்கு சற்றும் தொடர்பில்லாத அளவுக்கு சரிந்து விட்டது. அதிலும் பெரும்பகுதியை அவர்கள் வருமானவரியாக கட்ட வேண்டியிருப்பது சுமையை அதிகரிக்கிறது. இந்தியாவின் தனிநபர் வருமானவரி விலக்கிற்கான வருவாய் வரம்பு கடந்த 2014-ஆம் ஆண்டில் தான் ரூ. 2 லட்சத்திலிருந்து 2.5 லட்சமாக உயர்த்தப்பட்டது. அதன்பின் 7 ஆண்டுகளாக இந்த வரம்பு உயர்த்தப்படவில்லை. 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு தான் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைப்படி அரசு ஊழியர்களின் ஊதியங்கள் உயர்த்தப்பட்டன. அதற்கேற்ற வகையிலானவது வருமானவரி விலக்குக்கான உச்சவரம்பு உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். இந்த வரம்பு ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப் படக்கூடும் என்று கடந்த ஐந்தாண்டுகளாகவே பேசப்பட்டு வரும் நிலையில் எதுவும் நடக்கவில்லை.

தனிநபர் வருமானவரி விலக்கிற்கான வருவாய் வரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை நடப்பாண்டிலாவது நிறைவேற்றப்பட வேண்டும். அதேபோல், 2017-ஆம் ஆண்டு முதல் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்ட மருத்துவம் - போக்குவரத்துச் செலவுகளுக்கான நிரந்தரக் கழிவு இப்போது ரூ.50 ஆயிரமாக உள்ளது. இன்றைய சூழலுக்கு இது போதுமானதல்ல. கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும், அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாகவும் மருத்துவம் மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்து விட்டன. அதனால், வருமானவரி செலுத்தும் தனிநபர்களுக்கான நிரந்தரக் கழிவை ரூ.1 லட்சமாக அதிகரிக்க மத்திய அரசு முன்வர வேண்டும். கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதன் தாக்கங்களால் கிராமப்புற பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஊரக மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்காத நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் தான் அவர்களுக்கு கை கொடுத்தது. அத்திட்டத்திற்காக 2020-21 ஆண்டில் ரூ.1.11 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது; நடப்பாண்டிலும் இதுவரை 1.08 லட்சம் கோடி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கூட ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக கடந்த ஆண்டில் 51.52 நாட்களும், நடப்பாண்டில் இதுவரை 43.20 நாட்களும் மட்டுமே வேலை வழங்க முடிந்திருக்கிறது. ஊரக மக்களின் வாழ்வாதாரத் தேவைகளை நிறைவேற்றுவதற்கு இது போதுமானதல்ல.

 மக்களுக்கு போதிய அளவில் வேலைவாய்ப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்காக இத்திட்டத்தின்படி ஒவ்வொரு குடும்பத்திற்கும் அதிகபட்சமாக வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை 150 ஆக உயர்த்துவதுடன், அதற்கு ஏற்ற வகையில் அத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டையும் அதிகரிக்க வேண்டும். இவை அனைத்திற்கும் மேலாக இத்திட்டத்தை வேளாண்மை பணிகளுக்கும் நீட்டித்து மத்திய அரசு ஆணையிட வேண்டும். வருமானவரி விலக்கிற்கான உச்சவரம்பை ரூ. 5 லட்சமாகவும், நிரந்தரக் கழிவை ரூ.1 லட்சமாகவும்  உயர்த்த வேண்டும், ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட வேலை நாட்களை 150 ஆக உயர்த்துதல்  ஆகியவற்றுடன் பெட்ரோல், டீசல் மீதான வரிகளைக் குறைத்தல், தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்கக் கட்டணத்தைக் குறைத்தல் ஆகியவை குறித்த அறிவிப்புகளையும் நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு வெளியிட வேண்டும்; மக்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.