கடந்த 5 ஆண்டுகளில் பெண் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட வன்கொடுமை 38,900 - திமுக அரசை விளாசிய அண்ணாமலை..!!
சட்டசபை தேர்தலையொட்டி அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
தளி தொகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது; தளி தொகுதி மக்கள் மாற்றத்தை எதிர்பார்த்து உள்ளனர். 2006, 2011 மற்றும் 2021ல் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ராமச்சந்திரன் எம்எல்ஏவாக இருந்துள்ளார். இவரது காலத்தில் இங்கு எத்தனை கொலைகள், கொள்ளைகள் நடந்துள்ளன. இவர்களின் கூட்டணியில் உள்ள திராவிட விடுதலைக் கழகமே இவரைப் பற்றி பேசியிருக்கிறார்கள். ரூ.100 கோடி கிரானைட் கொள்ளை வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. 1996ல் என்சி ராமன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தளி ராமச்சந்திரன் முக்கிய குற்றவாளியாக இருக்கிறார். இந்தக் கொலையை நேரில் பார்த்த ராமனின் சகோதரரும் பஸ் ஸ்டாண்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதிலும் குற்றவாளியாக இருக்கிறார். ரியல் எஸ்டேட் தொழிலுக்காக இங்குள்ள மக்களின் சொத்துக்களை எல்லாம் ராமச்சந்திரன் எழுதி வாங்கிக் கொண்டார்.
தொகுதியில் மாற்றம் கொண்டு வர வேண்டும் எனில், டில்லியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜ ஆட்சி, தமிழகத்தில் முதல்வர் இபிஎஸ் தலைமையிலான ஆட்சி, தளி மற்றும் ஒசூர் தொகுதியிலும் இங்கிருந்து வெற்றி வேட்பாளர்கள் செல்ல வேண்டும். மூன்றும் ஒரே நேர்கோட்டில் இருந்தால் மட்டுமே மாற்றம் ஏற்படும்.கடந்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு பிரயோஜனம் இல்லாத ஆட்சி. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கினார்களா? இல்லை. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு இருக்கிறதா? இல்லை. 511 தேர்தல் வாக்குறுதிகள் கொடுத்தார்களே, நிறைவேற்றினார்களா? இல்லை. 511ல் 70 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை. 2021ல் திமுக அறிவித்த வாக்குறுதிகளை, அப்படியே 2026 தேர்தலுக்கான வாக்குறுதியாக அறிவித்துள்ளார்கள். உங்களுக்கு எல்லாம் திமுக மரியாதை கொடுக்கிறதா? இல்லை.
2 நாட்களுக்கு முன்பு பார்லியில் பிரதமர் மோடி, தாய்மார்களுக்கு குரல் கொடுப்பதற்காக ஒரு மசோதா கொண்டு வந்தார். ஆனால், பார்லியில் காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் திட்டமிட்டு, அந்த மசோதாவை தோற்கடித்துள்ளார்கள். இந்த மசோதாவால் தமிழகத்திற்கு எந்த கெடுதலும் இல்லை. 39 எம்பிக்களின் எண்ணிக்கை 59ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எல்லா மாநிலத்திலும் 50 சதவீதம் தொகுதி உயர்த்தப்பட்டுள்ளது.விகிதாச்சார அடிப்படையில் தென்னிந்தியா மற்றும் தமிழகத்தின் உரிமையை மோடி விட்டுக்கொடுக்கவில்லை. 50 சதவீதம் உயர்த்தியும் கூட திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் எல்லாம் சேர்ந்து, பார்லியில் இந்த மசோதாவை தோற்கடித்துள்ளார்கள். எப்படி உங்களுக்கு எதிராக திமுகவும், கம்யூனிஸ்டும் பார்லியில் ஓட்டுப் போட்டார்களோ, அதேபோல 23ம் தேதி நீங்கள் இவர்களுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். மோடி சொன்னால் செய்வார். பார்லியில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி எப்படியும் கொண்டு வருவார்.தற்போது 25 லட்சம் பேருக்கு ஒரு எம்பி இருக்கிறார். அப்படியிருந்தால் எம்பியை யாருமே பார்க்க முடியாது. இந்த மகளிருக்கான இடஒதுக்கீடு மசோதாவை மட்டும் நிறைவேற்றி இருந்தால், 12 லட்சம் பேருக்கு ஒரு எம்பி கிடைத்திருப்பார். அதையும் கெடுத்து, நாசப்படுத்தி, சகோதரிகளை பார்லியில் நெருங்க விடாமல் தடுத்து விட்டது திமுக.
தமிழகத்தில் இப்போது மாற்றம் இல்லை என்றால், எப்போதும் இல்லை என்ற நம்பிக்கையில் மக்கள் இங்கு கூடியுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. 2080 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளனர். 8008 பெண்கள் கொல்லப்பட்டுள்ளனர். 18 வயதுக்கு குறைந்த பெண் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட வன்கொடுமை 38,900. ஒரு நாளைக்கு 28 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உயிர்பாதுகாப்பு, சொத்து பாதுகாப்புக்கு பிறகு தான் வளர்ச்சி. ஸ்டாலினைப் பொறுத்தவரையில் சட்டம் ஒழுங்கை நாசப்படுத்தி, முதல்வர் நாற்காலியில் அமர்ந்துள்ளார். நீங்கள் செலுத்தும் ஓட்டு, அடுத்த 5 ஆண்டுகளுக்கு உங்களின் தலைவிதியை தீர்மானிக்கக் கூடியது. பிரதமர் மோடி ஏராளமான திட்டங்களைக் கொடுத்துள்ளார். ஆனால், இந்த திமுக தலைவர்கள் சொல்வதெல்லாம் பொய், பொய். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், கிருஷ்ணகிரியில் உள்ள ஒசூரில் நிறைய நிறுவனங்களை கொண்டு வந்துள்ளது. 4 வழிச்சாலை போடப்பட்டுள்ளது. புதிய ரயில்பாதை திட்டம் என பல திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இதுபோன்று திமுக தலைவர்கள் யாராவது ஒருவர் இதுபோன்ற திட்டங்களை பட்டியிட்டு சொல்லியிருக்கிறார்களா? எதுக்கெடுத்தாலும், காலையில் ஹிந்தி, ஹிந்தி என்று சொல்வார்கள். மதியம் டில்லி, டில்லி என்று சொல்வார்கள். மாலையில் மோடி வஞ்சிக்கிறார், மோடி வஞ்சிக்கிறார் என்று சொல்வார்கள். எல்லோரிடமும் செல்போன் இருக்கிறது, தட்டிப் பார்த்தால் எல்லாருக்கும் தெரியும்.ஸ்டாலினை ஏன் விவசாயி இல்லை என்று நாம் சொல்கிறோம் என்றால், பால் கொம்பில் இருந்து வருகிறதா? காம்பில் இருந்து வருகிறதா? என்று தெரியாது. அப்படியொரு விவசாயி. டெல்டா பகுதியில் விவசாய நிலத்தில் கான்கிரீட் ரோடு போட்டு நடக்கிறார். 2022ல் பஞ்சு வைத்து பொங்கல் வைத்து போட்டோ போடுகிறார். இபிஎஸ் ஒரு விவசாயி. எதுவுமே தெரியாமல் 5 ஆண்டுகளை ஓட்டி விட்டார் ஸ்டாலின். நடிகர் வடிவேலு சொல்வதைப் போல, சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என்று. தமிழகத்தில் 5 ஆண்டுகள் சும்மா இருந்து கொண்டு, ஒரு மனுஷன் எவ்வளவு கஷ்டப்பட்டு வெளியே போகிறார் என்று யோசித்து பாருங்கள், இவ்வாறு அவர் பேசினார்